2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க துணை திட்டங்கள்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
விஜய நகர்: 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் விஜயநகரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
2047ம் ஆண்டுக்குள் நாம் உண்மையாகவே ஒரு வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும். விஜயநகரப் பேரரசும் அதற்காகவே பாடுபட்டது. பேரரசு செழிப்பாக இருக்கும்போது, மக்களும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருப்பார்கள். இதுவே நான் இங்கிருந்து எடுத்துச் செல்லும் செய்தியாகும்.
என்னுடன் வந்த அதிகாரிகளிடம், விஜயநகர பேரரசின் செழிப்பு, நல்லெண்ணம் ஆகியவற்றை எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், இங்கு ஒரு மரக்கன்றை நட்டு ஒரு சிறிய தடம் பதிக்க வேண்டும் என்று நான் கூற விரும்பினேன்.
குறிப்பாக விஜயநகரின் வறட்சி பாதித்த பகுதிகளில் இதைச் செய்ய வேண்டும். நான் இதற்கு முன்பு குருல்கிக்குச் சென்றிருக்கிறேன், அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நான் அறிவேன்.
முழு அமைச்சகமும், என்னுடன் வந்த 120 அதிகாரிகளும் விஜயநகரத்தில் தலா ஒரு மரக்கன்றை நட ஒப்புக்கொண்டதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து பங்கேற்கவும், நிலையான வாழ்க்கையை ஊக்குவிக்கவும் இந்த முயற்சியை எடுக்கிறோம்.
மேலும் இந்த மாவட்டத்தை பசுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்ற விரும்புகிறோம்.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?