2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம்
பாட்னா:
வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது: இதுவரை, மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன, ஒட்டுமொத்த அளவில் 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு நிச்சயமாக எட்டப்படும்.
இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடைய தனியார் துறை அதிலும் குறிப்பாக தொழில்துறை பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பிஹார் மாநில தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையும் இன்னும் அறிவிக்கவில்லை.
மியான்மர் உல்பா-ஐ அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவ உயர் அதிகாரி தகவல்
குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது.
இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.
இதுகுறித்து ராணுவ (குவா ஹாட்டி) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறும்போது, “இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை’’ என்றார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “உல்பா-ஐ அமைப்பினர் மீது அசாம் போலீஸார் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதுபோல அசாம் மண்ணில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால் அதுகுறித்து அறிக்கை வெளியாகி இருக்கும். ஆனால் ராணுவம் சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை’’ என்றார்.