2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் உறுதி

2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் உறுதி

மயிலாடுதுறை, ஆக.11-


வருகிற சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று பூம்புகாரில் நடந்த மகளிர் பெருவிழா மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவரும், மாநாட்டு குழு தலைவருமான அருள்மொழி, சரஸ்வதி கல்வி அறக்கட்டளை தாளாளர் ஸ்ரீகாந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்


மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-


பெண்களுக்கு என்ன சக்தி உள்ளது என்பதை ஆண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மாநாடுகளில் எனது மூத்த பிள்ளை குரு என்று சொல்லுவேன். அவர் உயிரோடு இருந்திருந்தால் எந்த அளவுக்கு சிறப்பாக இந்த மாநாட்டை நடத்துவாரோ, அதே அளவுக்கு சிறப்பாக டெல்டா மாவட்ட செயலாளர்கள், பிற மாவட்ட செயலாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்தியுள்ளனர்.


மாநாட்டுக்கு போலீஸ் துறையும், அரசும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னார். அந்த வகையில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த மாநாடு நடந்து உள்ளது. பெண்கள் எல்லா நிலையிலும் முன்னேற வேண்டும்.


சமீபத்தில் கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி கூறும்போது, தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக் கூடாது என்றும், அதற்கு உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலையும், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோவிலையும் குறிப்பிட்டு சொன்னார். இது அருமையான வார்த்தை.


படிப்பில் ஆண்களை விட, பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர். தொழில் செய்வதில் கூட முன்னிலையில் உள்ளனர்.


வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்காமல் முன்வர வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தார். இதனால் 108 சமுதாயங்கள் பயனடைந்தனர்.


சாதிவாரி கணக்கெடுப்பு


நடத்த வேண்டும்


இப்போது தந்தையை மிஞ்சிய தனையனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது?. அதை செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும். எனவே உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.


மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டை எதிர்த்து, பெண்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும். என்னை கூப்பிட்டால் சின்ன போராட்டமாக இருந்தாலும் நானும் பங்கேற்பேன். நாங்கள் ஆட்சிக்கு வந்து நிச்சயமாக மது, கஞ்சாவை ஒழிப்போம்.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். துறைகளில் பெண்கள் தான் அதிகளவில் தேர்வு ஆகிறார்கள். ஆண்கள் பின்னுக்கு சென்று விடுகிறார்கள். இதற்கு போதை பழக்கம்தான் காரணம். வருகிற சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றிக்கூட்டணி அமைப்பேன். யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்காதீர்கள். நான் சொல்வதுதான் நடக்கப்போகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


தீர்மானங்கள்


தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-– பெண்களுக்கு உரிமை வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கான நாடாளுமன்ற சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரால் மனவேதனைக்கு உள்ளாக்கப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டும்.


தமிழ்நாட்டின் பெண் கல்வி அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.


தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%