கோல்டுகோஸ்ட், நவ.7-
4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20ஓவர் போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி சுப்மன் கில்லும், அபிஷேக் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (6.4 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசிய பந்தை அபிஷேக் ஷர்மா (28 ரன், 21 பந்து, 3 பவுண்டரி) தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஜம்பாவின் சுழலில் முட்டிப்போட்டு அடுத்தடுத்து இரு சிக்சர் பறக்க விட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
14 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது 180 ரன்களை நெருங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் கில்- சூர்யகுமார் கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. சுப்மன் கில் 46 ரன்களிலும் (39 பந்து), சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் (10 பந்து) ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அக்ஷர் பட்டேல் (21 ரன், 11 பந்து) கணிசமான பங்களிப்பை அளித்து 160 ரன்களை தாண்ட வைத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஜோடிக்கு 5-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் மேத்யூ ஷார்ட் (25 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஜோஷ் இங்லிசும் (12 ரன்) அவரது பந்தில் கிளீன் போல்டானார்.
மிட்செல் மார்சை (30 ரன்), ஷிவம் துபே காலி செய்தார். புயல்வேக பேட்ஸ்மேன்கள் டிம் டேவிட் (14 ரன்), மேக்ஸ்வெல் (2 ரன்) வீழ்ந்ததும் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய பேட்டர்கள் மீள முடியாமல் முடங்கினர்.
அந்த அணி 18.2 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (சனிக்கிழமை) பிரிஸ்பேனில் நடக்கிறது.