100 பெண்கள், திருநங்கைகளுக்கு மானியத்துடன் ஆட்டோ: உதயநிதி வழங்கினார்
Aug 11 2025
11

சென்னை, ஆக.9-
100 பெண்கள், திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வழங்கும் விழா தொழிலாளர் நலன் மற்றும திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு புதிய ஆட்டோவுக்கான சாவியை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
தொழிலாளர் நலன் காப்பதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என திராவிட மாடல் அரசு இன்றைக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே மகளிர், திருநங்கையருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு மானியத்துடன் ஆட்டோ கொடுக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. வாழ்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கின்ற ஒவ்வொரு மகளிருக்கும் நீங்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், துணை மேயர் மகேஷ்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?