*புதுவைத் தமிழ்ச் சங்கத் தமிழ் நாள்காட்டி: முதல்வர் ந.ரங்கசாமி வெளியிட, அமைச்சர் க.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.*
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் ஆண்டு 2057 தமிழ் நாள்காட்டியினை மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி வெளியிட பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு க.லட்சுமி நாராயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் எண்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ் நாள்காட்டி ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் திருவள்ளுவர் ஆண்டு 2057 கான நாள்காட்டி வெளியீட்டு விழா முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு.மோகன் தாசு வரவேற்றார். முதல்வர் ந.ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார். அதனை பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ந.ஆதிகேசவன், ப.திருநாவுக்கரசு,பொருளர் மு.அருள்செல்வம்,துணைச்செயலர் தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமனி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ். இராஜா, பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், இர.ஆனந்தராசன்,கிஷோர், பரசுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நாள்காட்டியில் தமிழ் எண்கள் மட்டுமல்லாது ஆங்கில நாட்களையும் குறிக்கும் விதமாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மறைந்த தமிழறிஞர்கள் 90 பேரின் படங்கள் அவர்களது பிறந்தநாள் நினைவு நாளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவை சிவம், தமிழ்ஒளி ஆகியோரது படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழுக்காக தொண்டாற்றிய தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஆகியோரின் படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்பு வாய்ந்த நாள்காட்டி தமிழ்ச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் அரசு விடுமுறை நாட்கள்,உலக அமைதிநாள், உலகத் தாய்மொழி நாள், மொழிப்போர் வீரர் நாள் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் அரசு விடுமுறை நாட்களும் இந்த நாள்காட்டியில் இடம் பெற்றுள்ளன. இந்த நாள்காட்டியினை புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்களுக்கும்,தமிழறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு, மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கும்,அகலத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கும் இந்த நாள்காட்டி அனுப்பி வைக்கப்படுகிறது.