ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
Jul 23 2025
10

துாத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி, ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க ஒரு தரப்பினரும், ஆலையை அப்பகுதியில் இருந்து அகற்ற ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் மீனவ கிராம மக்கள், சுயஉதவி குழு பெண்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என, பல தரப்பினரும் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று திரண்டனர்.
ஒரே நேரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. 'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து வேலை வழங்க வேண்டும்; ஆலையை திறக்க உறுதி அளிக்கும் கட்சிக்கு ஓட்டு போடுவோம்' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, ஒரு அமைப்பிற்கு ஐந்து பேர் வீதம் கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர். அவர்கள் அளித்த மனு:
ஸ்டெர்லைட் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவங்கலாம் என, நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். சுற்றுச்சூழலுக்காக பர்யாவரண பூஷண் விருது பெற்ற பேராசிரியர் கணபதி யாதவ், ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோரின் இந்த அறிக்கையை வரவேற்கிறோம். அவர்களின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொழில் துறை மீட்சி மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது விஞ்ஞான அடிப்படையிலான தீர்வு கிடைத்துள்ளது. மாநில அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பு, மற்றும் நாட்டிற்கும், மாநிலத்திற்குமான செம்பு தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆலையை மீண்டும் திறக்க சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?