வாசகர் கடிதம் (P. கணபதி) 31.07.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 31.07.25


இனிய தமிழ்நாடு இ - குழும சொந்தங்களுக்கு அன்பு வணக்கம்.


இன்றைய (31.07.2025) இ - இதழில் :


பா. ஜ. க. வைக் கேள்வி கேட்க காங்கிரசுக்கு உரிமை இல்லை. அமித் ஷா அவர்களின் பேச்சு சூடான தலைப்புச் செய்தி. அவரது பேச்சில் நியாயம் இருக்கிறது. இருப்பினும் "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்" என்பது குறள். 


ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது, ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் செய்வது, இந்தியாவின் பணமற்ற வர்த்தகத் தடை, இந்தியாவின் "அருவருப்பான" செயல்பாடுகள் - இவையெல்லாம் டிரம்ப் அவர்கள் இந்தியா மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் சில. இதனால் 25% இறக்குமதி வரியை இந்தியப் பொருள்கள் மீது விதிப்பதாக டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார். ( டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் பெருமளவில் சரிந்துள்ளது இன்றைய தொலைக்காட்சி செய்தி). பாக். உடனான இந்தியாவின் போரை தானே நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்தியாவின் மீது இவ்வளவு வெறுப்புணர்ச்சி கொண்டுள்ள பெரியண்ணன் உடனானநெருங்கிய உறவை மறுபரிசீலனை செய்வது அவசியமல்லவா?


ஜூலை 23 நிலவரப்படி இந்திய விமானங்களின் தொழில்நுட்பக் கோளாறுகளின் எண்ணிக்கை 183 என்பதுவும், விமானிகள் விடுப்பு எடுக்கும் நாட்கள் அதிகரிப்பு என்பதுவும் நாட்டின் விமான சேவை தரை நோக்கிப் பாய்வதைக் காட்டுகிறது. அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 


பகல்காம் படுகொலைகளால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்பதாகக் கூறியுள்ள ராகுல் அவர்களின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.  


உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 58330.26 கோடி, மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் 8673.72 கோடி என்பது வியப்புக்குரிய செய்தியாக உள்ளது. 


கொத்துக் கொத்தாக குழந்தைகள் உட்பட காஸா மக்கள் பட்டினியால் சாவதை கண்முன்னே உலகம் பார்க்கும் நிலையில் அங்கு பட்டினிச் சாவே இல்லை என்ற இனப்படுகொலைக் குற்றவாளி நெதன்யாகு கூறுவது பெரும் பாவம். அவர் மீது அளவற்ற வெறுப்பையே ஏற்படுத்துகிறது.


விண்வெளிப் பொருள் ஒன்று பூமியைத் தாக்க இருக்கிறதாம். 3I/ அட்லஸ் என்ற அப்பொருள் 10 முதல் 20 கி. மீ. அகலம் கொண்டது. அதன் பயண வேகம் வினாடிக்கு 60 கி. மீ. அல்லது மணிக்கு 2.45 லட்சம் கி. மீ. அது நவம்பரில் பூமியைத் தாக்கக்கூடும் என்று ஹார்வார்ட் அறிவியலாளர் அவிலோயப் சொல்வது மிக மிக விந்தையான செய்தியாக உள்ளது. 

F= MA என்ற சமன்பாட்டின்படி பார்த்தால் அது மோதுவதால் ஏற்படுத்தும் விளைவு பேரழிவு என்பது உறுதி. ஆனாலும் இவையெல்லாம் கணக்கீட்டு யூகங்கள் (calculative assumptions) மட்டுமே என்றும், அல்ட்டிமேட் ட்ரூத் அல்ல என்றும் நாம் அமைதி கொள்ளலாம். 


மழைக்காலம், பனிக்காலம் குறித்த கட்டுரை வாசகர்களின் உடல்நலம் குறித்த தமிழ்நாடு இ இதழின் அக்கறையைக் காட்டுகிறது. நன்றி. பயனுள்ள கட்டுரை. 


வழக்கம்போல் கவிதைகள், கட்டுரைகள், வட்டாரச் செய்திகள், தினம் ஒரு தலைவர், வாசகர் கடிதம் எல்லாமே யாவரும் பயனுறும் வகையில் நேர்த்தியாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு இ இதழ் குழுமத்தாரின் இணையற்ற சேவைக்கு நன்றிகள் பல. 



P. கணபதி 

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%