3 ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் கடனாக வாங்கி
திருப்பி செலுத்தாமல் இருந்ததால் அனில் அம்பானியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.
இந்த சோதனைகள் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர். இதுபோன்று பல பண முதலைகள் வங்கிகளில் கடனை பெற்று திருப்பி செலுத்தாமல் இருக்கின்றன.
அவை அனைத்தையும் வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தான் இழந்த நற்பெயரை அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியும்.
வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கி திருப்பி செலுத்தாத பெரிய கோடீஸ்வரர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருப்பதாக ஒரு கெட்ட பெயர் இப்போது நிலவி வருகிறது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்து நாட்டுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும். இந்த ஒப்பந்தம் குறித்து அவருடைய அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.
அமைச்சர் ஐ.பெரியசாமி தனது தொகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஆயிரம் மாணவர்களுக்கு தனது செலவிலேயே கல்லூரி கட்டணத்தையும்
செமஸ்டர் கட்டணத்தையும் செலுத்தி வருகிறார்.
இதுதான் உண்மையான கல்வி சேவை மற்றும் ஏழைகளுக்கு உதவும் தொண்டு ஆகும். இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்.
அவர்கள் வாழ்நாளில் இந்த உதவியை மறக்க முடியாத படி செய்துவிட்டார் அமைச்சர்.
கடந்த ஆண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
பலரையும் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது. சுமார் 80 மாணவர்கள் இடைநீக்கம் அல்லது பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றம் ஆகியிருக்கிறார்கள்.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை ட்ரம்புக்கு ஆதரவானதாக கருதப்படுகிறது. நியாயமாய் பார்த்தால் கல்வியை கற்பதற்காக நாடு விட்டு நாடு வந்துவிட்டு வந்த நாட்டில்
மற்றொரு நாட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்க செயலாகும்.
ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம் என்று அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறியிருக்கிறார். இவரது பேச்சு அமெரிக்கா மீதான நல்ல எண்ணத்தை உலக நாடுகளுக்கு இடையே கெடுத்து விடும் அபாயம் இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் இருக்கும் காசியாபாத் நகரில் உலகத்திலேயே இல்லாத ஒரு நாட்டுக்கு தூதரகம் ஒன்றை அமைத்து அதை நடத்தி வந்திருக்கிறார் ஒரு போலி ஆசாமி.
இதற்கு முன் போலியாக போலீஸ் ஸ்டேஷன் நடத்திய செய்தியைப் படித்திருக்கிறேன். இனி எதிர்காலத்தில் போலியாக பாராளுமன்றத்தை கூட நடத்தும் துணிச்சல் வந்து விடும் இவர்களுக்கு.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட இடங்களுக்கு
பாரத் கவுரவ் ரயில் விடப்பட்டிருக்கிறது என்ற செய்தி படித்தேன்.
சாமானியர்கள் அந்த ரயிலை தொட்டுக் கூட பார்க்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் விடுதலைப் போராட்ட இடங்களை தரிசிக்க வேண்டும் என்றால் சாதாரண கட்டணத்தில் ரயில்களை விட வேண்டும்.
பாரத் கௌரவ் ரயில்கள் மேல் தட்டு மக்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டவை.
அதன் கட்டணங்களை கேட்டால் தலை சுற்றும்.
******
வெ,ஆசைத்தம்பி
தஞ்சாவூர்