அழுகையே நீ விலகிப் போபோ

அழுகையே நீ விலகிப் போபோ


-பாவலர் கருமலைத்தமிழாழன்


எதற்கின்னும் அழுகையேநீ என்மீ தேறி

எவ்வளவு நேரம்தான் அமர்ந்தி ருப்பாய்

கதறுகின்ற சோகத்தை முகத்தில் தேக்கிக்

கலங்கவைத்துக் கண்களிலே இங்கி ருப்பாய் !

விதவிதமாய் நாளுமொரு துன்பத் தோடு

விரக்தியாக்கி என்செயலை முடக்கு கின்றாய்

வதம்செய்யத் துடிக்காதே வேறு வேலை

வரிசையாக எனக்குளது விலகிச் செல்நீ !


அடுத்தவர்கள் வாழ்வதுபோல் வாழ வேண்டும்

அடுத்தவேளை உண்பதற்கு உழைக் வேண்டும்

படுத்தென்னைக் கவலையிலே மூழ்க வைத்துப்

பார்ப்பவர்கள் இரங்குமாறு வைத்தி டாதே !

விடுத்தென்னை மற்றவர்கள் முன்னே செல்ல

வினையாற்ற முடியாமல் முடக்கி டாதே

வடுவாகக் கண்ணீரை மாற்றி டாமல்

வழிவிடுவாய் புன்னகைதாம் பூப்ப தற்கே !


பழுத்தமரம் பிறருக்குக் கொடுப்ப தைப்போல்

பணமீட்டிப் பிறர்க்குதவி புரிய வேண்டும்

உழுதுநெல்லை விளைவிக்கும் உழவன் போல

ஊர்வாழ பாடுபடச் செல்ல வேண்டும் !

வழுக்களினைச் செய்தேய்க்கும் வல்லோர் தம்மை

வழிமறித்துப் புத்தியினைப் புகட்ட வேண்டும்

அழுகையே எனைவிட்டு நகர்ந்து போபோ

அடுத்தடுத்துக் காத்துளது பணியெ னக்கே !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%