வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 7 பேர் கைது: முகம்மது யூனுஸ் தகவல்

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 7 பேர் கைது: முகம்மது யூனுஸ் தகவல்


 

டாக்கா: வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘மைமன்சிங் மாவட்டம் பலுகாவில் 27 வயது சனாதன இந்து தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ராப்பிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி) படையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். ஆர்ஏபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லிமோன் சர்க்கார் (19), தாரிக் ஹொசைன் (19), மாணிக் மியா (20), எர்ஷாத் அலி (39), நிஜும் உத்தின் (20), அலோம்கிர் ஹொசைன் (38), மிராஜ் ஹொசைன் அகோன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ஏபி பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகளை நடத்தி மேற்கூறிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், மறைந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்​மான் ஹாடியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் இறுதிச் சடங்கு பிரார்த்தனை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தெற்கு பிளாசா பகுதியில் முகம்மது யூனுஸ் தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, ஹாடி படித்த டாக்கா பல்கலைக்கழகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு மற்றுமொரு பிரார்த்தனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக டாக்காவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%