மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவரிடமிருந்து 1.2 கிலோ தங்கக் கட்டி திருட்டு: 3 பேர் கைது
Jul 24 2025
12

சென்னை, ஜூலை 22–
சென்னை சிந்தாதரிப்பேட்டை அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவரிடமிருந்து 1.2 கிலோ தங்கக் கட்டியை திருடிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நம்மாழ்வார் தெருவில் வசித்து வரும் ராம்கோபால் மாஜி (54), என்பவர் சௌகார்பேட்டை பகுதியில் நகைபட்டறை வைத்து, நகை கடைகளுக்கு தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இவர் பிற்பகல் தி.நகரில் உள்ள ஒரு நகைகடையில் இருந்து சுமார் 1.2 கிலோ தங்க கட்டியை வாங்கிக் கொண்டு, சிந்தாதிரிப்பேட்டை, சிம்சன் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மழையின் காரணமாக பிரேக் போட்ட போது, நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அப்போது அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்களான சந்தோஷ்குமார் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும் கீழே விழுந்த ராம்கோபால் மாஜியை கைபிடித்து தூக்கிவிட்டு, ஆட்டோவில் உட்கார வைத்துள்ளனர்.
பின்னர் ராம்கோபால் மாஜியின் உறவினர்கள் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராம்கோபால்மாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, மயக்கம் தெளிந்து தனது இருசக்கர வாகனத்தின் பையில் வைத்திருந்த தங்க கட்டியை பார்த்தபோது, சுமார் 1.2 கிலோ தங்க கட்டியை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ராம்கோபால்மாஜி கொடுத்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, மேற்படி தங்ககட்டியை திருடிச் சென்ற ஆட்டோ டிரைவர்கள் சந்தோஷ்குமார் (26), ராஜசேகர் (எ) பூபாலன் (32), இளவரசன் (எ) சிபி (22) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்க கட்டி மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே திருட்டு, அடிதடி உட்பட 4 குற்ற வழக்குகளும், ராஜசேகர் (எ) பூபாலன் மீது 1 திருட்டு வழக்கும், இளவரசன் (எ) சிபி மீது கொலைமுயற்சி உட்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேருக்கு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?