மின்சார ஆட்டோ வாங்க விரும்பும் மகளிருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி: கலெக்டர் தினேஷ்குமார் தகவல்
கிருஷ்ணகிரி, நவ. 5–
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓசூர் வட்டம், பத்தலப்பள்ளி கிளையின் மூலம், ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான மின்சார இ–ஆட்டோ கடனுதவி வழங்கப்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மானியம் அடங்கும்.
இக்கடனுதவிக்கான ஆட்டோ சாவியை, கலெக்டர் தினேஷ் குமார், பயனாளரான ராணி என்பவருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் குமார் பேசும்போது,
“தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, 2025–2026 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மின்சார இ–ஆட்டோ வாங்குவதற்காக அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.”
இக்கடனுதவிக்காக, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்கள் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் புதிய மின்சார ஆட்டோ வாங்கும் செலவினத்தில், தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் பெண்கள், இம்மாவட்டத்தில் செயல்படும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 22 கிளைகளில் எதனையாவது அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மலர்விழி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், பொது மேலாளர் கருணாகரன், கிளை மேலாளர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?