தூத்துக்குடி: அதிக சரக்குப் பெட்டகங்களை சுமக்கும் திறனுடைய மிக நீளமான சரக்குப் பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை படைத்தது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தக்ஷிண் பாரத் கேட்வே சரக்குப் பெட்டக முனையத்தில் 304 மீ. நீளமும், 40 மீ. அகலமும் கொண்ட சரக்குப் பெட்டக கப்பலை வெற்றிகரமாக கையாண்டு சாதனை படைத்தது. 6,724 டிஇயு சரக்குப் பெட்டகங்களை சுமக்கும் மிக நீளமான இந்த சரக்குப் பெட்டக கப்பலின் வருகையால் துறைமுகம் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது.
பனாமாவின் கொலோன் துறைமுகத்திலிருந்து வந்த எம்எஸ்சி மைக்கேலா என்ற சரக்குப் பெட்டக கப்பல் (படம்), வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3,977 டிஇயு சரக்குப் பெட்டகங்களை சுமந்து மீண்டும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு புறப்படும்.
இதில், 2,676 டிஇயு சரக்குப் பெட்டகங்கள் இறக்குமதியும், 1,104 டிஇயு சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதியும், 148 டிஇயு சரக்குப் பெட்டகங்கள் மறுசீரமைப்பும், 49 டிஇயு சரக்குப் பெட்டகங்கள் பரிமாற்றமும் செய்யப்பட்டன.
நிகழ் நிதியாண்டில் நவ. 2025 வரை இத்துறைமுகமானது 5,62,928 டிஇயு சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் கையாண்டதைவிட இது 8.06 சதவீதம் அதிகமாகும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் கூறியது: இந்த சரக்கு கப்பலை வெற்றிகரமாக கையாள காரணம், அதிகபட்ச மிதவை ஆழம் 11.20 மீட்டராக உயர்த்துதல், துறைமுக கப்பல் சுற்றுவட்ட பாதையை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக விரிவுபடுத்துதல், துறைமுகத்துக்குள் நேரடி நுழைவு சேவை போன்ற வசதியை செயல்படுத்துதல், 60 டன் போலார்ட் புல் திறன் கொண்ட 4-ஆவது இழுவை கப்பல் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதே ஆகும்.
விரைவில் அமையும் வெளி துறைமுகத் திட்டத்தால், இந்தத் துறைமுகம் தென் இந்தியாவின் முக்கிய வர்த்தக நுழைவாயிலாக அமையும் என்றார் அவர்.
இந் நிகழ்ச்சியில் வ.உ.சி துறைமுகத் துணைத் தலைவர் ராஜேஷ் செளந்தரராஜன், தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மஹாராஜ், தூத்துக்குடி சுங்க ஆணையர் விகாஸ் நாயர், ஐஆர்எஸ் கப்பல் கேப்டன் வுஜ்னோவிக் டிரிபோ, டிபிஜிடி முனையத் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் குமார், எம்எஸ்சி ஏஜென்சி நிறுவன மூத்த பொது மேலாளர் பென்னி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?