" ராசப்பன் - ராக்காயி இருவரும் கூலித் தொழிலாளி தான் . ராக்காயி ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்தாள்.
ராசப்பன் கட்டத் தொழிலாளி இரண்டு மகன்கள் பள்ளியில் படித்தனர். ராசப்பன் குடிப்பதால் வீட்டு வருமானமும் மகன்கள் படிப்பும் பாதிகப்பட்டது .
ராக்காயி டாக்டரிடம் சொல்லி தன் கணவன் குடியைப் பற்றி புலம்பினாள் .
டாக்டர் விக்ரம் கவலைப்படாதே ராக்காயி இதற்கு ஒரு ஐடியா இருக்கு நான் வயித்து வலி மாத்திரை ஒரு வாரத்துக்கு தரேன் அதை எப்படியாவது தினம் ஒரு மாத்திரைன்னு உன் வீட்டுக்காரருக்கு கொடுத்து விடு.
வயித்து வலியால துடிப்பான் அடுத்த வாரம் என்கிட்ட கூட்டி வந்துடு மற்றதை நான் பார்த்திருக்கிறேன் என்று மாத்திரை கொடுத்தார் .
ராக்காயி மாத்திரையை பத்திரப்படுத்தி ராசப்பனுக்கு தண்ணியில கலந்து தினமும் கொடுத்து விட்டாள் .
வயித்து வலி தாங்காம துடித்தான் ராசப்பன் . ஏழு நாட்களும் வயிற்று வலி தொடர ராசப்பனை டாக்டர் விக்ரம் கிளினிக் அழைத்து சென்றாள் ராக்காயி .
டாக்டர் விக்ரம் ராசப்பன் வயிற்றுப் பகுதிக்கு எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார் . ராக்காயி எடுத்து வந்து கொடுத்தாள்.
தயாராக ஒரு பெரிய குடிகாரன் எக்ஸ்ரேவை மறைத்து வைத்திருந்தார் டாக்டர் .ராசப்பன் எக்ஸ்ரே வந்ததும் இதை எடுத்து அந்த கவரில் மாத்தி வைத்தார் . ராசப்பன் எக்ஸ்ரே சரியாகத் தான் இருந்தது .
டாக்டர் விக்ரம் ..... ராசப்பா உன் வயிற்று பகுதி எக்ஸ்ரேவை பாரு குடல் அரிச்சு பாதி தான் தெரியுது . இனி குடிக்காதே ஒரு மாசத்துக்கு மாத்திரை எழுதி இருக்கேன் . இதை சாப்பிடு வயித்து வலி சரியா போயிடும் , ஆனா திரும்பி குடிக்க நீ ஆம்பிச்சா வயித்து வலி ஓவராகி அட்மிட் தான் ஆகனும் என்று எச்சரிக்கையா சொல்லி அனுப்பி வைத்தார் .
அடுத்த நாள் வந்த ராக்காயிடம் அது சத்து மாத்திரை தான் உடம்புக்கு நல்லது . ஆனா நீ பயத்தை மட்டும் விடாம ராசப்பனுக்கு கிளப்பி விடு என்றார் டாக்டர் விக்ரம் .
வீடு திரும்பிய ராக்காயி ராசப்பனிடம் இப்ப வயித்து வலி எப்படி இருக்கு என்று கேட்டாள் , வலி குறைந்து விட்டது நல்ல தெம்பா இருக்கு டாக்டர் கொடுத்த மாத்திரை நல்லாவே வேலை செய்யுது என்றான் மகிழ்ச்சியாக .
நீ திரும்பி குடிச்சா வயித்து வலி வந்துடும் மறந்துடாதீங்க என்றாள் ராக்காயி . வயித்து வலிக்கு பயந்து குடிப்பதை நிறுத்தி விட்டான் ராசப்பன் .
ஒரு வருடத்தில் குடும்ப கடன் எல்லாம் தீர பிள்ளைகள் படிப்பும் திருப்தியாக இருந்தது.
வசதியான வீட்டிற்கு குடிமாறினான் ராசப்பன் . புது வீட்டில் டாக்டர் விக்ரம் போட்டோவை மாட்டினாள் தினமும் நன்றி சொல்லி மனதார வாழ்த்திட ராக்காயி .
இது போல் நல்லது நடக்க நூறு பொய் கூட சொல்லலாமே .
- சீர்காழி .ஆர். சீதாராமன் .