பு(பொ)ன்முறுவல்

பு(பொ)ன்முறுவல்


          காலைக் கதிரவன் வேலை செய்த களிப்போடு மஞ்சள் நீராட்டுக்குத் தயாரான மாலை நேரம்........


    வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்தன.அத்தனை வாகனங்களையும் கண்களால் அளந்து லாவகமாக பின்னுக்குத் தள்ளி வீடு வந்து சேர்ந்தான் பிரபு.

     

      சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்தான்.

  

         ஏங்க ! ஒரு விசயம் 

என்றபடியே கையில் காஃபியோடு வந்த மனைவியைப் பார்த்தான். இவள் கொடுக்கும் காஃபியே பரவாயில்லை என்னும் அளவிற்கு இவள் சொல்லக் கூடிய விஷயம் இருக்கும் என்பதை யூகித்தான்.


     சொல்லு...... என்று சொல்லிக்கொண்டே வாய் காஃபியையும் கண்கள் தொலைக்காட்சியையும் பார்த்தன. கவனமில்லாமல் குடித்தால் தான் காஃபியின் சுவை தெரியாது.இது அவன் எப்பொழுதும் பின்பற்றும் ஒரு டெக்னிக். 


   அது..... வர்ற வெள்ளிக்கிழமை அக்கா நம்ம வீட்டுக்கு வராங்களாம் என்றாள்.


      அவள் அக்கா என்று சொன்னது அவளுடைய அக்காவை. தன் சொந்த அண்ணனின் மனைவியும் கூட. மனைவி ஒருவகையில் தூரத்துச் சொந்தம் என்பதால் இவன் சிறுவயதில் அந்த வீட்டில் வளர்ந்தது நினைவுக்கு வந்தது.


       அந்த நாட்கள் மனக்கண் முன் வந்தது. அம்மா அப்பா இல்லாத காலங்களில் அண்ணனை நம்பி அவரது வீட்டில் இருந்த இளமைக் காலங்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்த வயதிற்கே உரிய பசிக்கான உணவு கிடைக்காது. அண்ணியும் அண்ணனும் தன் ஒரே மகனுடன் ஹோட்டலுக்கும் சினிமாவுக்கும் செல்லும்போது இவன் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது இன்றும் நினைவிருக்கிறது.


    தன் கடமையைச் சரியாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு அண்ணன் சற்றும் பொருத்தமில்லாமல் மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து வைத்து தன் வாழ்க்கை பலியானது ஏனோ அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது.


       இத்தனை நாட்களில் ஏதோ ஒரு வகையில் அண்ணி தன் மனதைப் பாதித்ததும் தான் கஷ்டப்பட்டபோது எந்த உதவியும் செய்யாமல் தன் வாழ்க்கையை மட்டுமே கவனித்துக் கொண்டதும் 

   நெருஞ்சிமுள்ளாகக் குத்திக் கொண்டே தான் இருக்கிறது.


      அண்ணி ஒரு அலுவலகத்தில் நல்ல பதவியில் வேலை பார்த்தவர். வேலை பார்த்த காலத்தில் தன் குடும்பத்தைப் பற்றியோ தன் கஷ்டத்தில் பங்கு எடுத்ததோ அவனுக்கு நினைவு இல்லை. விருப்ப ஓய்வு வாங்கிய பிறகு அடிக்கடி அலைபேசியில் பேசுவது தொடர்ந்தது. 


     என்னங்க .....நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். எதுவுமே பேசாம இருக்கீங்க .அக்கா வராங்கன்னு சொன்னேனே என்று மனைவியின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தான்.


     ம்....ம்..... வரட்டும் என்றவன் நல்ல ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு சினிமாவுக்கும் போயிட்டு வீட்டுக்கு வருவோம் என்றான்.

  

   தன் பதிலைக் கேட்டு மனைவியின் முகம் மாறியதைக் கண்டவன் என்ன...... பாக்கற என்றான். 


   எப்பவுமே நீங்க அவங்களைக் குறை தானே சொல்லுவீங்க .எனக்கு அக்கா உங்க அண்ணின்னு ரெண்டு வகையில சொந்தம் இருந்தாலும் அவங்க நமக்குன்னு இதுவரைக்கும் எதுவுமே செஞ்சதில்ல நம்ம கஷ்டப்பட்ட காலத்துல கூட இருந்தது இல்லை உதவி வேணுமான்னு கேட்டது கூட இல்லைன்னு அடிக்கடி சொல்லுவீங்களே அதான் ஆச்சரியமா இருந்தது என்றாள்.


     ஆமா என்ன பண்றது..... நமக்குப் பிள்ளைங்க இருக்கு. 

மூத்தவளுக்குக் கல்யாணம் பண்ணனும். நமக்கும் வசதி வாய்ப்புன்னு அதிக அளவுல இருந்தாலும் அவங்க கிட்ட இருந்தும் நமக்கு உதவி தேவைப்படும். அது மட்டுமில்ல ஓய்வுப் பணமும் நிறைய வந்திருக்கும். பழசை எல்லாம் நெனச்சு அதை இழக்க விரும்பல அதனால நான் சொன்ன மாதிரி செய் என்று சொல்லிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியைப் பார்த்தான்.


     தான், தன் வசதி, தன் சந்தோஷம் என்று மட்டுமே இவனால் எப்பொழுதும் எப்படி நினைக்க முடிகிறது. பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட சுயநலத்திற்காக எல்லாவற்றையும் மறந்து எப்படி தன்னிலையிலிருந்து இறங்கி இவனால் எண்ண முடிகிறது என்று நினைத்த போது அவள் இதழ்கள் இதயத்தின் மகிழ்வில்லாத ஒரு புன்னகையை வெளிப்படுத்தியது. 


      எதிரில் இருந்த நிலைக் கண்ணாடி அதைப் புன்னகையாகக் காட்டாமல் பு(பொ)ன்னகையாகக் காட்டியது. பொன் பொருளுக்காக வந்த சிரிப்பு.


       ஆம்...... தன் கணவனின் இந்த எண்ணத்தால் இதழ் விரித்தது போலிப் புன்னகையை. பண ஆசை கொண்ட தன் கணவனின் செயலுக்காக மனம் வருத்தப்பட்டதை உணர்ந்தபடியே அடுக்களைக்குள் சென்றாள்.


 *************************************


தமிழ்நிலா 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%