புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் முடங்கிய ரூ. 23 கோடி: மின்சார பஸ்கள் பிற்பகலில் இருந்து இயக்கம்
புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மின்சார பஸ்கள் பிற்பகலில் இயங்கத்தொடங்கின.
புதுவை அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. மின்சார பஸ்களை கடந்த 27ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அன்றைய தினமே அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இது எனக்கூறி நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தின.
இருப்பினும் தனியார் பங்களிப்புடன் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த மின்சார பஸ்களுக்கு புதுவை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட மின்சார பஸ்கள் இன்று முடங்கியுள்ளன. வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை.
அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சம்பள உயர்வு கோரி மின்சார பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேசுகையில், "தங்களுக்கு சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தாலும் பிடித்தம்போக ரூ.17 ஆயிரம் மட்டும்தான் கிடைக்கும். அதோடு தினப்படியும் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
நிர்வாக தரப்பில் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை பலன்தரவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் மின்சார பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மின்சார பஸ்கள் பிற்பகலில் இயங்கத்தொடங்கின.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?