பிளாஷ்பேக் 2025: ஒரே ஆண்டில் ரூ.45 ஆயிரம் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..!

பிளாஷ்பேக் 2025: ஒரே ஆண்டில் ரூ.45 ஆயிரம் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..!


 

மஞ்சள் உலோகம்


இந்திய குடும்பங்களில் தங்கத்திற்கு எப்போதும் தனி மவுசுதான். இந்திய குடும்பங்கள் தங்க நகைகளை பாதுகாத்து தனது அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது இங்கு ஒரு மரபாக உள்ளது. நம் நாட்டில் அணிகலன்களாகவும், மிகப்பெரிய சொத்தாகவும் இருப்பது தங்கம். இந்த மஞ்சள் உலோகம் மீது காதல் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் ஆபரணமாக பார்க்கப்பட்ட தங்கம் காலப்போக்கில் முதலீடாக பார்க்கப்பட்டது. இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலைதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தங்கம் விலை இன்றைய தேதியில் ரூ.1 லட்சத்தை கடந்துள்ளதால் இல்லத்ததரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இன்றைய தேதியில் தங்கம் விலை.!


தற்போது காலை 10 மணிக்கு அதிரடி தலைப்புச் செய்தியாக இருக்கிறது தங்கம், வெள்ளி விலை நிலவரம். முன்பெல்லாம் தங்கம் விலையோடு எப்போதாவது சேர்ந்துவரும் ‘வரலாறு காணாத புதிய உச்சம்’ என்ற வர்ணனை இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இதனால், தங்கம் பலருக்கும் எட்டாக்கனியாகி வருகிறது.


கடந்த 15-ந்தேதிக்கு பின் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,770 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,600 உயர்ந்து விற்பனை ஆகிறது. இது, வரலாறு காணாத புதிய உச்சமாகும்.



உச்சத்தில் வெள்ளி விலை.!


வெள்ளி விலை கடந்த ஜனவரியில் ஒரு கிராம் ரூ.93க்கும், ஒரு கிலோ ரூ.93 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று (டிசம்பர் 23) கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.




ஒரு வருடத்தில் ரூ.45 ஆயிரம் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை.!


தங்கம் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. அதன்பிறகு அப்படியே படிப்படியாக உயர தொடங்கியது. தினமும் 2000, 3000 என்று உயர தொடங்கியது. இப்படி ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது.


அந்தநேரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை உயர்ந்தது ஆனால் அதன் விலையில் இடையில் சட்டென சரிவு ஏற்பட்டது. விலை படிப்படியாக குறைந்து வந்து, ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த நவம்பர் 5-ந் தேதி விற்பனை ஆனது. அதன்பிறகு தங்கம் விலை அதிரடியாக குறைந்து 88 ஆயிரம் என்கிற அளவில் கடந்த மாதம் வந்தது. ஆனால் அதன்பிறகு தங்கம் விலை குறையவே இல்லை.. பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையாகியே வந்தது. இந்த நிலையில், தற்போது ரூ.1 லட்சத்தை கடத்து புதிய உச்சம் தொட்டுள்ளது.



2024-ம் ஆண்டு முழுவதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.12,000 தான் மொத்தமுமாக உயர்ந்திருந்தது. ஆனால் நடப்பாண்டில் தற்போது வரை மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.45 ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது.


கடந்த 100 ஆண்டுகளில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:


ஆண்டு தங்கம் விலை(ஒரு சவரன்)


1920 - ரூ.21


1935 - ரூ.24


1940 - ரூ.36


1950 - ரூ.99


1960 - ரூ.113


1970 - ரூ.184


1980 - ரூ.1330


1990 - ரூ.3200


2000 - ரூ.4,400


2010 - ரூ.18,500


2016 - ரூ.20,000


2020 - ரூ.30,000


2022 - ரூ.40,000


2023 - ரூ.45,000


2024 - ரூ.50,௦௦௦



2025-ம் ஆண்டு மட்டும் தங்கம் விலை கடந்து வந்த பாதை:


2025 ஜனவரி - ரூ.60,000


2025 மார்ச் - ரூ.65,000


2025 ஏப்ரல் - ரூ.70,000


2025 ஜூலை - ரூ 75,040


2025 ஆகஸ்ட் - ரூ.77,000


2025 செப்டம்பர் - ரூ. 82,880


2025 அக்டோபர் ரூ. 92,320


2025 நவம்பர் - ரூ.93,040


2025 டிசம்பர் 15 - ரூ.1,00,120


2025 டிசம்பர் 23 - ரூ.1,02,160


தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள்:


தங்கம் விலை எப்போதுமே சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்பவே மாற்றம் காணும். உலகப் பொருளாதார போக்குகள், போர் நிலவரங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, சூப்பர் பவர் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் என பல விஷயங்கள் தங்கம் விலையை நிர்ணயிக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு;


1. அமெரிக்காவின் பொருளாதார சூழல்கள், தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.


2. தங்கம் இப்போது ஆபரணமாக மட்டுமன்றி, பங்குச்சந்தையில் ஒரு வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது. ஆன்லைன் டிரேடிங் மற்றும் பங்குச்சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது.


3. ஜப்பானிலும் பணவீக்கம் காரணமாக தங்கத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படுகிறது.


4. உலக அளவில் நிதி நிலையற்ற தன்மை நிவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதுமே இதற்கு காரணம் என்று டேவிட் டெயிட் தெரிவித்துள்ளார்.


5. 2025-ல் இஸ்ரேல் - காசா போர், உக்ரைன் - ரஷியா போர், டிரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்பு போன்ற அசாதாரண சூழல்களின் போது உலக நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை கணிசமாக அதிகரிப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


6. சீனாவின் மத்திய வங்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் சமீபகாலமாகவே தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகிறார்கள்..


7. தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.


8. பணவீக்கம் அதிகரிக்கும்போது, பணத்தின் மதிப்பு குறைவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயரும்


9. தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் வலுவிழக்கும்போது தங்கம் விலை உயரும், மற்றும் டாலர் வலுப்பெறும்போது விலை குறையும்



தங்கம் விலை குறையுமா?


1. அமெரிக்க பொருளாதாரம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டால் விலை ஏற்றம் தொடர்பான இந்த கணிப்பில் லேசான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


2. நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றங்கள் முற்றிலும் தணிந்தால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.


2. சில ஆய்வாளர்களின்படி, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும்போது, 2026-ன் பிற்பகுதியில் தங்கம் விலை சற்று குறையலாம்


* சாதாரண மக்கள் வாங்கக்கூடிய விலைக்கு மீண்டும் தங்கம் விலை திரும்புமா என்பது தான் லட்சக்கணக்கானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி ஒரு நிலைமை இனி வராது என்பது தான் நாம் ஏற்று கொள்ள வேண்டிய உண்மை. இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது உள்ளூர் காரணிகள் மட்டுமல்ல சர்வதேச காரணிகளையும் பொறுத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலக அளவிலேயே தங்க சந்தையே பெரிய மாற்றம் அடைந்துள்ளது.


* சர்வதேச சந்தையில் தற்போது அதிகமாக தங்கம் வாங்குவது நகை விற்பனை நிறுவனங்கள் கிடையாது, , மத்திய வங்கிகள். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படக்கூடிய மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி வைக்கின்றன. இந்த போக்கு குறைந்தால் தான் தங்கத்திற்கான தேவை குறைந்து விலை குறையும். ஆனால் இது ஒரு சர்வதேச அரசியல் அத்தனை சீக்கிரம் மாறாது.



ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்


ஒரு பவுன் தங்க நகை செய்கூலி, சேதாரத்தோடு இப்பவே ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில், ஏழை குடும்பத்துக்கு குண்டுமணி தங்கம் கூட கனாதான். நடுத்தரக் குடும்பங்களுக்கு தங்கம் எட்டாக்கனி தான். விலைவாசி உயர்வு ஒருபுறம் இருக்க, ஊதிய உயர்வு கிணற்றில் போட்ட கல்லாகத் தான் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானம் ஈட்டுவோருக்கு இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வால் நிச்சயமாக அவர்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று சமூக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.


அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் ஒரு நடுத்தர குடும்பம் மாதத்திற்கு சராசரியாக 33 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறது என தெரிய வந்துள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் சென்று விடுகிறது. இது தவிர கடன், கல்வி செலவு, மருத்துவ செலவு என இந்த பணமே போதாமல் இருக்கின்றனர். இதுபோக, அவர்கள் தங்கத்தை எப்படி நினைத்துப்பார்க்க முடியும்?


2004 ஆம் ஆண்டில் ஒரு சராசரி இந்திய நடுத்தர குடும்பத்தினர், மாதம் குறைந்த தொகையை சேமித்து வைத்தால் ஓராண்டில் 10 கிராம் தங்கத்தை வாங்கி விட முடிந்தது . ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு நாம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் கூட நம்முடைய இரண்டு அல்லது மூன்று மாத சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதாவது தங்கத்தின் விலை உயர்கிறது ஆனால் அந்த அளவிற்கு நம்முடைய ஊதியம் உயரவில்லை.


புவி அரசியல் பதற்றங்கள் நீங்கி, அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதாகவும், சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மையும் ஏற்படும்போது தங்கம் விலை அன்றாட உயர்வைக் காண்பது வேண்டுமானாலும் குறையுமே தவிர இனி தடாலடியாகக் குறையும் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவு என்றும் சந்தை நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.



முக்கிய நாடுகளில் இன்றைய 22 காரட் ஆபரணத்தங்கம் விலை (1 கிராம்)


குவைத் - ரூ.11,503


மலேசியா - ரூ.12,239


ஓமன் - ரூ.11,952


கத்தார் - ரூ.11,861


சவுதி அரேபியா- ரூ.11,755


சிங்கப்பூர் - ரூ.12,281


அமெரிக்கா - ரூ.12,096


இங்கிலாந்து - ரூ.11,668


கனடா - ரூ.12,128


ஆஸ்திரேலியா - ரூ.12,240


சீனா - ரூ.11,603


பாகிஸ்தான் - ரூ.11,532


பங்களாதேஷ் - ரூ.11,617


இலங்கை - ரூ.12,577


ரஷியா - ரூ.11,722


ஜப்பான் - ரூ.11,628


ஜெர்மனி - ரூ.12,707


பிரான்ஸ் - ரூ.12,707


நியூசிலாந்து - ரூ.11,621


ஆபரணத்தங்கம் குறித்த மேலும் சில தகவல்கள்:


* இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.


* உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) டேவிட் டெயிட், தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தங்கம் விலை அடுத்த ஆண்டு மேலும் உயரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.


* 2026-ல் இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.55 லட்சம் வரை செல்லக்கூடும் என பல நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்


* இந்தியாவில் இனி பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%