பாலி தீவில் படகு கடலில் மூழ்கி விபத்து: 2 பேர் பலி.. மாயமான 43 பேரின் கதி என்ன..?
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இது பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது, சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பயணித்தது.
இந்த படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான நீரில் மிதந்த பின்னர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பன்யுவாங்கி காவல்துறைத் தலைவர் ராம சம்தாமா புத்ரா தெரிவித்தார்.
மீட்புப் பணிகளில் இழுவைப் படகுகள் மற்றும் சிறிய அளவிலான கப்பல்கள் உட்பட ஒன்பது படகுகள் ஈடுபட்டுள்ளன, அவை நேற்று இரவு அந்தப் பகுதியில் மாயமான 43 பேரை தேடும் பணியில் ஈடுபட்டன. இந்த குழுக்கள் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலி நாட்டில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 3 பேர் கடத்தல்
மாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு மாலி. இங்குள்ள கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலியில் உள்ள காயேஸ் பகுதியில் உள்ள வைர தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்திய பயங்கவராதிகள் அல்குவைதா பயங்கரவாதிகளின் ஆதரவு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்து, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:
மாலி நாட்டில் உள்ள பமாகோ பகுதியில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுடன் பேசி வருகிறோம். இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி அரசை கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.