பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி - 2 பெண்கள் கைது

பாலியல் புகார் கூறி ரூ.10 கோடி பணம் பறிக்க முயற்சி - 2 பெண்கள் கைது


 

மும்பை,


மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் கோயல். இவரது மகன் ரித்தம். கடந்த நவம்பர் 5-ந்தேதி ரித்தமுக்கும், யஷஷ்வி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 14-ந்தேதி, அம்போலி பகுதியில் உள்ள ஓட்டலில் ரித்தம் தனது நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.


விருந்து முடிந்த பிறகு ரித்தம், யஷஷ்வி, அவரது தம்பி ஆகியோர் ஓட்டலில் உள்ள லிப்ட்டில் தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லிப்டில் மற்றொரு பெண் ஏறினார். திடீரென அந்த பெண், ரித்தம் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறி வாக்குவாதம் செய்தார். அந்த லிப்ட் தரைத்தளத்திற்கு வந்தபோது, அந்த பெண் கத்தி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர் இது தொடர்பாக அம்போலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில், புகார் அளித்த பெண்ணும், மற்றொரு பெண்ணும் சேர்ந்து தொழிலதிபர் அரவிந்த் கோயலை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். அவரிடம், இந்த வழக்கை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ளலாம், ஆனால் அதற்கு ரூ.10 கோடி பணம் தர வேண்டும் என்று அந்த பெண்கள் கேட்டுள்ளனர். மேலும், பணம் தராவிட்டால் அவரது மகன் மீது பாலியல் புகார்களை கூறி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது போல் செய்து விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.


இதன் பின்னர் தொழிலதிபர் அரவிந்த் கோயல் ரூ.5.5 கோடி பணம் கொடுக்க சம்மதித்துள்ளார். அதே சமயம், இது குறித்து மும்பை காவல்துறையினரிடம் அவர் புகார் ஒன்றையும் அளித்தார். இதையடுத்து, பணம் கேட்டு மிரட்டிய 2 பெண்களையும் கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, தொழிலதிபர் அரவிந்த் கோயல் அந்த பெண்களை லோயர் பரேல் பகுதிக்கு வரவழைத்தார். அவர்கள் பணத்தை பெற்ற சமயத்தில் போலீசார் அந்த 2 பெண்களையும் மடக்கிப் பிடித்தனர்.


பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்களின் பெயர்கள் ஹேம்லதா பேன்(39) மற்றும் அம்ரினா பெர்னாண்டஸ்(33) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெண்களுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட மூன்றாவது நபரான உத்கர்ஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%