பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்



பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர்.


பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


இந்த சூழலில் இன்று காலை 11.00 மணிக்கு மக்களவை கூடியது. அவை கூடியதும், காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுகையில் தெரிவித்தனர்.


அவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நேற்று காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இது எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.


பார்லிமென்டில் எந்த விஷயங்கள் குறித்தும் விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து பிரதமரைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


டெல்லியில் பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,


காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் சித்தாந்தத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை; ராகுல் இடதுசாரி சித்தாந்தத்தையோ அல்லது அவரது கட்சி விரும்பும் வேறு எந்த சித்தாந்தத்தையோ பின்பற்றலாம்.


ஆனால் நாங்கள் நாட்டிற்காகப் பணியாற்றுகிறோம். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் காங்கிரஸ் பேரணியில் பேசுவது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்களை நாங்கள் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.


ஏற்றுக்கொள்ள முடியாது


வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நாட்டிற்காகப் பணியாற்றுகிறோம். 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம். இந்தியாவை வலிமையானதாகவும், பெருமைக்குரியதாகவும் மாற்றுவதே பிரதமர் மோடியின் கனவு.


இந்த சூழலில் பிரதமர் மோடி குறித்து பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்லிமென்ட் கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் மனிதாபிமானம் மிச்சமிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும்நாடும் மக்களும் முக்கியம் என்று நினைத்தால், அவர்கள் தாமதிக்கக் கூடாது.


பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அமைதியாக இருக்குமாறு எம்பிக்களிடம் கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.


அதேபோல் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அங்கும் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%