
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த நாடாளுமன்ற முடக்கம் நேற்றும் 4-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, 'மாநில கல்வி உரிமைகளை பறிப்பதற்காக தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய கல்வித்துறை மந்திரி சுகந்தா மஜும்தார் அளித்துள்ள பதில் வருமாறு:-
கிராம பஞ்சாயத்துகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் எம்.பி.க்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே 29.7.2020 அன்று தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் தரமான கல்வியை அளிப்பதில் முறையே மத்திய, மாநில அரசுகளுக்கு சரிவிகித பொறுப்பு உள்ளது.
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட இது உதுவும். பொதுப்பட்டியலில் கல்வி உள்ளது என்பதை உணர்ந்த வடிவமாக அந்தந்த மாநிலங்களுக்கான பாடநூல் திட்டங்கள், கற்றல் முறைகள், பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதாகவே தேசிய கல்விக்கொள்கை திகழும். கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை.
மத்திய, மாநில அளவிலான முறையான கண்காணிப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடும் மட்டுமே இன்றியமையாதது. இக்கொள்கையை பற்றி விழிப்புணர்வை அளிக்கவும், மேலும் புதுமையான அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கவும் பயிற்சி வகுப்புகள், கருத்துப்பகிர்வை உறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதுசார்ந்த கல்வி அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பதிலளித்து உள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?