தூய்மையே தாய்மை

தூய்மையே தாய்மை


ஞாயிற்றுக் கிழமை.


அந்தக் குடியிருப்புப் பகுதியில் கிட்டத்தட்ட எண்பது வீடுகள் இருக்கும். எல்லா வீட்டுக்காரர்களுமே இன்று காலையிலிருந்தே சுறுசுறுப்பாய் இருந்தனர்.


காரணம்?


 "தூய்மையே தாய்மை" என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் அந்த தெருக்காரர்களுக்கு "ஞாயிறு போட்டி" ஒன்றை அறிவித்திருந்தனர்.


   "இன்று காலை 11 மணி வாக்கில். எங்கள் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் உங்கள் வீடு தேடி வருவார்கள்!... யாருடைய வீடு மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளதோ அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசாக வழங்கப்படும்"


    அப்போதிருந்தே சூடு பிடித்தது போட்டி.


   சிலர் வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு வர்ணம் பூசினர். சிலர் காம்பவுண்ட் சுவர்களில் படங்களை வரைந்தனர். சிலர் வீட்டின் ஹால், பெட்ரூம், கிச்சன் உட்பட எல்லா இடங்களை "பளிச்"சென்று ஆக்கி வைத்தனர்.


   ஒவ்வொரு வீடும் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பெண் போல் அழகொளிர்ந்தன.


   சரியாக பதினோரு மணிக்கு வந்திறங்கிய அந்தக் குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து ஒவ்வொரு அறையையும் தீர்க்கமாக ஆராய்ந்து மதிப்பெண் போட்டனர்.


   மூன்று மணி நேரம் கடந்த பின், "எல்லோருக்கும் ரொம்ப நன்றி... எங்களோட முடிவுகள் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்று சொல்லி விட்டு அந்தக் குழு நகர்ந்தது.


  "எனக்கென்னமோ... வாத்தியார் வீட்டுடம்மாவுக்குத்தான் பரிசு கிடைக்கும்!னு தோணுது" என்றாள் ஒருத்தி.


  "ராசாத்தி அக்காவிற்குத்தான் கிடைக்கும்" என்றாள் இன்னொருத்தி.


  ஆளாளுக்குத் தங்கள் யூகங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், திரும்ப வந்த குழுவினர் தங்கள் முடிவை அறிவித்தனர்.


  "மூணாவது தெருவில் இருக்கும் 32-ம் நம்பர் வீட்டுக்கு ரூபாய் 10000 பரிசு வழங்கப்படுகின்றது"


   காத்திருந்த பெண்கள் அனைவரும் முகம் சுளித்தனர்.


   "என்னது அந்த வீட்டிற்கா?... அய்ய ...வெளிச் சுவற்றுக்கும், காம்பௌண்டுக்கும் புது வர்ணம் கூடப் பூசலை... வீட்டுக்குள்ளார கூட அவ்வளவு பிரமாதமா சுத்தம் பண்ணலை... அவங்களுக்குப் போயி... பரிசா...?.. ம்ஹும் தேர்வு சரியில்லை!" என்றொருத்தி புகார் செய்ய,


 "ஆமாம்.. ஆமாம்..."கோரஸ் ஒலித்தது.


 மெலிதாய்ச் சிரித்த தேர்வாளர் ஒருவர் கேட்டார், "நீங்க வீட்டைச் சுத்தம் செய்த பின் குப்பைகளை எங்கே போட்டீங்க?"


 "அது... வந்து... தெருவுல... ஓரத்துல"


 "அதாவது நீங்க எல்லோரும் உங்களோட வீட்டை சுத்தம் பண்றதிலேயே குறியாய் இருந்திருக்கீங்க... அதனால தெருவைப் பற்றிக் கவலைப்படலை... ஆனா அவங்க தன்னோட வீட்டை ஓரளவுக்குச் சுத்தம் செய்துக்கிட்டு தான் குடியிருக்கும் தெருவைப் "பள...பள"ன்னு சுத்தம் பண்ணியிருக்காங்க..."


 "யெஸ்... அவங்களோட அந்தப் பொது நல எண்ணத்தைப் பாராட்டும் விதமாய்த்தான் நாங்க இந்த பரிசை அவருக்குத் தர்றோம்"


மற்ற பெண்கள் அனைவரும் தலை குனிய, 32ம் நெம்பர் வீட்டுக்காரி தலை நிமிர்ந்தபடி வந்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டாள்.


(முற்றும்)


முகில் தினகரன்,

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%