திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்கள் பெற நவம்பர் 15ந் தேதி கடைசி நாள்
திருப்பூர், நவ. 10–
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளுக்கும், ஆதார் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில் 21-வது தவணை கௌரவ ஊக்கத் தொகை பெற விவசாயிகள் இந்த அடையாள எண் பெறுவது அவசியம் ஆகும்.
இந்த அடையாள எண்கள் வழங்கும் முகாம் நவம்பர் 5 முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை மற்றும் சகோதர துறை அலுவலர்களால் நடத்தப் பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,07,892 விவசாயிகளில் இதுவரை 92,503 விவசாயி களுக்கு இந்த முகாம்கள் மூலம் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் மற்றும் வேளாண்மை உழவர்நலத்துறை மூலம் கிராமங்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்கு பதிவு மேற்கொள்ள கடைசி நாளான நவம்பர் 15க்குள் சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில் 21-வது தவணை கௌரவ ஊக்கத் தொகை மற்றும் மாநில அரசின் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து மானியங்களும் பெற விவசாயிகள் இந்த அடையாள எண் பெறுவது அவசியமாவதால் உடனடியாக அந்தந்த வட்டாரத்தின் வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி அனைத்து விவசாய பெருமக்களும் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் மனிஷ்நாரணவரே தெரிவித்துள்ளார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?