திண்டிவனம், செஞ்சி பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

திண்டிவனம், செஞ்சி பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம்,


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் மற்றும் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமங்களில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், களஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.


இதுகுறித்து அவர் கூறியதாவது:-


மொளசூர் ஓடைப்பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம், அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது. சிற்பத்தின் மேல் வலதுபுறத்தில் மானும், இடதுபுறத்தில் சிம்மமும் அழகாக காட்டப்பட்டுள்ளன. மான், சிங்கம் இரண்டுமே கொற்றவையின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சிற்பத்தின் வலது கீழ்ப்பகுதியில் தனது தலையை தானே அரிந்துகொண்டு பலி கொடுக்கும் வீரன் அமர்ந்து இருக்கிறான். இடது பக்கத்தில் வழிபாடு செய்யும் அடியவர் அமர்ந்து இருக்கிறார். பல்லவர் கலைப்பாணிக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு ஆகும். மொளசூர் ஏரியில் புதைந்த நிலையில் மற்றொரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. மேலும் 2 மூத்ததேவி சிற்பங்கள் மற்றும் அய்யனார் சிற்பமும் இவ்வூரில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் மொளசூர் கிராமம் சிறப்பான வழிபாட்டில் இருந்துள்ளது.


செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆலகால ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. சுமார் 3 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கனத்த மார்புகள் சரிந்த வயிற்றுடன் தலையலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமர்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். அவளது வலதுகரம் அபய முத்திரையுடனும், இடதுகரம் சிறிய அளவிலான செல்வக்குடத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.


மூத்ததேவியின் இரு பக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் அமர்ந்து இருக்கின்றனர். சிற்பத்தின் மேல்பகுதியில் காக்கைக்கொடியும் அவளது ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்த சிற்பம் பல்லவர் காலத்தின் இறுதியில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம். உள்ளூர் மக்கள் இந்த தெய்வத்தை காளி என வணங்கி வருகின்றனர். மேலும் மானசாதேவி என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த பெயருக்கும், மூத்ததேவிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கொற்றவை, மூத்ததேவி வழிபாடு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் தொடர்கிறது என்பதற்கு மொளசூர், ஆலம்பூண்டி சிற்பங்கள் உதாரணமாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%