திண்டிவனம் அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு
Jul 19 2025
10

விழுப்புரம், ஜூலை.17-
திண்டிவனம் அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ளது வன்னிப்பேர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-–
இங்கிருக்கும் சிவன் கோவில் அருகில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் 2½ அடி உயரத்தில் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி மூத்ததேவி அமர்ந்து இருக்கிறாள். வலது மேல் மூலையில் காக்கை கொடியும், இடது மேல் மூலையில் அவளது ஆயுதமான துடைப்பமும் அமைந்துள்ளன. இவரை அப்பகுதி மக்கள் துர்க்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இந்த இடத்திற்கு துர்க்கைமேடு என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமத்தின் ஆசனாம்பாறை எனும் இடத்தில் சுமார் 5 அடி உயரத்தில் விஷ்ணு சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் 4 கரங்களுடன் காட்சிதரும் விஷ்ணுவின் வலதுகரம் அபய முத்திரையிலும், இடது கரம் இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் பெரிய ஏரியின் உட்பகுதியில் துர்க்கை சிற்பம் ஒன்று 2 துண்டுகளாக உடைந்த நிலையில் காணப்படுகிறது. துர்க்கையின் பின்னணியில் மிகப்பெரிய மான் நின்றிருக்கிறது. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல்லவர் காலத்தைச் (கி.பி. 8-9 நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும்.
வன்னிப்பேர் கிராமத்தில் பழைய சிவாலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இவற்றை வாசித்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜயவேணுகோபால், இவை இப்பகுதியில் ஆட்சி செய்த பார்த்திவேந்திரன் எனும் மன்னனின் 4-ம் ஆட்சியாண்டை (கி.பி.910) சேர்ந்தவை ஆகும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வன்னிப்பேர் கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்று சிறப்புகளுடன் இருந்ததை இங்கிருக்கும் சிற்பங்கள், கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?