தந்தைக்கு ஒரு தாலாட்டு

தந்தைக்கு ஒரு தாலாட்டு


(உழைத்து உழைத்து ஓய்வுபெற்று.. அயர்ந்து உறங்குகின்ற தந்தைக்கு மகள் பாடியத் தாலாட்டு.!)


ஆராரோ.. ஆரிரரோ..

 அப்பாவே கண்ணுறங்கு..!

ஆசையுடன் பெற்றவரே ஐயாவே கண்ணுறங்கு!

ஓயாது உழைத்தவரே.. ஓய்வெடுத்துக் கண்ணுறங்கு..! உன்மகளின் குரல்கேட்டு உளம்மகிழந்து கண்ணுறங்கு.!


முதலெழுத்துத் தந்தவரே .. முத்தமிட்டு வளர்த்தவரே.. முன்விழித்து வேலைசெய்ய.. அதிகாலை நடந்தவரே..

  காப்பித்தண்ணி குடித்துவிட்டு.. இரவெல்லாம் உழைத்துவிட்டு.. எங்களை வளர்த்தவரே.. என் அப்பாவே கண்ணுறங்கு.!


காதறுந்த செருப்புடனே.. புதச் செருப்பு வாங்கித் தந்தாய்..கிழிந்த ஆடை கட்டிக் கொண்டு.. புத்தாடை எமக்களித்தாய்.. 

நான் படிக்க நீ விழித்தாய்.. 

நடைதளர்ந்தும் எனை வளர்த்தாய் .! கோவிலிலே தெய்வமென இன்றுவரை நினைத்தேனே.. குலசாமி என் தந்தாய்! நீயுறங்க இசைத்தேனே!


பள்ளியிலே படிக்க வைக்க பாடுபல பட்டவரே.. கல்யாணம் காட்சிக்காக.. காசுசேர்த்து வைத்தவரே.. 

  கைப்பிடித்து மறுவீடு போகும் போது தெரியாமல் கண்ணீரைத் துடைத்தவரே.. தேயும்பிறையானவரே.! தெய்வமே.. கண்ணுறங்கு.!


ஒற்றையாடை உன்னாடை.. அதிலும்மோர் ஓட்டையுண்டே.. பெற்றமகள் வாழ்வுக்கே 

பெருங்கடனும் ஊரிலுண்டே.. 

 பெயரன் பெயர்த்திகளை தூக்கி வைத்து கொஞ்சுவீரே.. பேரன்பை வெளிப்படுத்தத் தெரியாது தவிப்பவரே.. கரையேற்றும் ஓடமென காட்சிதரும் அப்பாவே.. இருந்தயிடம் இருந்தபடி இனியேனும் கண்ணுறங்கும்.!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%