டெல்லி கார் வெடிப்பு வழக்கு; பஞ்சாப்பில் அறுவை சிகிச்சை டாக்டர் கைது

டெல்லி கார் வெடிப்பு வழக்கு; பஞ்சாப்பில் அறுவை சிகிச்சை டாக்டர் கைது


டெல்லி கார் வெடிப்பு வழக்கில் அரியானாவின் நூ மாவட்டத்தில் 2 டாக்டர்களை விசாரணைக்காக போலீசார் நேற்று கைது செய்தனர்.

சண்டிகார்,


டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் ஐ20 ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.


சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்ததுடன், அவருடைய டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் காரை ஓட்டி வந்தது உமர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


இந்த சம்பவத்தில், காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த மவுலவி இஷ்தியாக் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.


டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முசாமில் ஆகியோர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் பயிற்சி டாக்டர்கள் ஆவார்கள். கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அல்-பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.


இந்நிலையில், பஞ்சாப்பின் பதன்கோட் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 45 வயது மதிக்கத்தக்க அறுவை சிகிச்சை டாக்டர் ஒருவரை விசாரணை அமைப்புகள் கைது செய்துள்ளன.


அவர் இதற்கு முன்பு, அரியானாவின் பரீதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளார். இந்த வழக்கில் அரியானாவின் நூ மாவட்டத்தில் 2 டாக்டர்களை விசாரணைக்காக போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் ஒருவர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். மற்றொருவர் இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி டாக்டராக இருந்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%