டெல்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்கு பிறகு யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு
புதுடெல்லி, ஜூலை 14
6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி கல்லூியில் படித்த திரிபுரா மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி சிநேகா தேப்நாத், டெல்லியில் உள்ள ஆத்ம ராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதப்பிரிவில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பர்யவரன் வளாகத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவர், கடந்த 7ம் தேதி முதல் மாயமானார்.
இதையடுத்து, அவரது சகோதரி பிபாஷா தேப்நாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் புகார் மனுவில், தோழி பிதுனியாவை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வருவதாக தாயாரிடம் ஸ்நேகா கூறிவிட்டு சென்றார். இதற்காக அதிகாலை 5.15 மணிக்கு சுபே சந்திரா என்பவரின் டாக்சியில் சென்றுள்ளார். காலை 8.45 மணியளவில் ஸ்நேகாவை தொடர்பு கொள்ள முயன்ற போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு பிதுனியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஸ்நேகாவை சந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து டாக்சி ஓட்டுநரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஸ்நேகாவை வாஷிராபாத்தில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் இறக்கி விட்டதாக கூறினார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஸ்நேகாவை யாரேனும் கடத்தி விட்டார்களா? என்ற போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றி, அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கொடுத்தனர்.
இதனிடையே கடைசியாக சினேகாவை பார்த்தவர்கள், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது. நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கியது.
இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். இதனையடுத்து உண்மையிலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சினேகாவின் தந்தை, முன்னதாக சமூக வளைத்தில், தனது மகளின் மரணத்தில் இருக்கும் உண்மையைக் கண்டறிய உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்திருத்தார். வடக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் மட்டும் சுமார் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் கூட, சம்பவத்தன்று ஒரு கேமராவும் வேலை செய்யவில்லை என்று மாணவியின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சம்பவம் நடந்தது ஒரு மாநிலம், இவர்கள் வாழ்வது ஒரு மாநிலம் என்பதால், வழக்குப் பதிவு செய்வதில் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.