டித்வா புயலால் இலங்கையில் 56 பேர் உயிரிழப்பு; 44,000 பேர் பாதிப்பு - நிலவரம் என்ன?
கொழும்பு: டித்வா புயலால் இலங்கையில் 56 பேர் உயிரிழந்தனர்; காணாமல் போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது; அதி கனமழை - வெள்ளத்தால் 44,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டித்வா புயலால் இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதி கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேரை காணவில்லை; 44,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பதுல்லா மாவட்டத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்ததாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கெலானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு சிகப்புநிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்புவிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அநுராதாபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர் இலங்கையின் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இலங்கையின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் இன்று 200 மிமி மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக மாணவர்களுக்கான பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டித்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல், விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது. தேவை எழும் எனில் மேலும் உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து உறுதியுடன் நிற்கிறது" என தெரிவித்துள்ளார்.