சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர்
சென்னை:
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வந்தது. போட்டியின் 9-வது நாளான நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 8-வது சுற்றின் முடிவிலேயே 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார்.
இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10-வது
இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதிய ஆட்டம் 49-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதேபோன்று அமெரிக்காவின் அவாண்டர் லியாங், இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சகநாட்டைச் சேர்ந்த ஜோர்டன் வான் பாரஸ்டை 33-வது நகர்த்தலின் போது தோற்கடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால்சரின், சகநாட்டைச் சேர்ந்த வி.பிரணவை 55-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார்.
கடைசி சுற்றின் முடிவில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2-வது இடமும், அர்ஜுன் எரிகைசி 5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். கார்த்திகேயன் முரளி (5), நிஹால் சரின் (4.5), அவாண்டர் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோர்டன் வான் பாரஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களுடன் தொடரை நிறைவு செய்தனர்.
குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அத்துடன் 24 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் அவருக்கு கிடைத்தது. இந்த புள்ளிகள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். அனிஷ் கிரி, அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.10.83 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.