சென்னை அரும்பாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2.4 கோடி மோசடி: 2 பேர் கைது
Oct 31 2025
23
சென்னை, அக். 30–
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள அச்சலிஸ் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த நிலையில் டில்லிபாபு உட்பட சுமார் 70 பொதுமக்களிடம் பணம் ரூ.2.4 கோடிக்கு மேல் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு, சிட்பண்டு நிறுவனத்தின் இயக்குநர்களான யுவராஜ், ஆனந்தன் மற்றும் இந்நிறுவனத்தில் கணக்கு மேலாளராக வேலை செய்து வந்த வினோத்குமார் ஆகியோர் சிட்பண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு மேற்படி டில்லிபாபு மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ஆ.ராதிகா வழிகாட்டுதலின் பேரில், துணை ஆணையாளர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வுப்பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆனந்தன், என்பவரை கோயம்புத்தூரில் வைத்தும், நிறுவனத்தின் கணக்கு மேலாளர் வினோத்குமார் என்பவரை 29.10.2025 சென்னையில் வைத்தும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?