சிறை

சிறை


அந்தத் தெருவின் மூத்த குடியிருப்பாளர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் துரை. அந்தத் தெருவில் சாதனாவிற்கு மட்டும் அவரைப் பார்த்தாலே ஒருவித ஒவ்வாமை.


 "போலீஸ்காரங்க சகவாசமே வேணாம். எப்பவும் கொலை, கொள்ளை, திருட்டுன்னு கிரிமினல்களோடவே பழகுறவங்க. இவங்ககிட்ட மென்மையை எதிர்பார்க்க முடியாது" என்பது சாதனாவின் மாறாத கருத்து.

அன்று மாலை, சாதனாவின் மருமகள் நித்யா இருசக்கர வாகனத்தில் வரும்போது முக்கிய சாலையில் விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் சரிந்தாள். "போலீஸ் கேஸ் ஆகும், நாம எதுக்கு வம்பு?" என்று பலரும் வேடிக்கை பார்த்தபோது, தற்செயலாக அந்த பக்கம் வந்த துரை அங்கு புயலென சென்றார் துரை. தனது சட்டையைக் கழற்றி நித்யாவின் காயத்தில் கட்டி, இரத்தம் வெளியேறுவதைத் தடுத்து, அவளைத் தனது காரிலேயே மருத்துவமனைக்கு விரைந்தார்.

அவரது வேகமான முதலுதவி நித்யா உயிரை மீட்டு தந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பகுதி காவல் நிலையத்திலிருந்து போலீசார் விசாரணைக்காக மருத்துவமனைக்கு வந்தனர்.

"இந்த விபத்தை நேர்ல பார்த்தது யாரு? பொண்ணை யாரு இங்க கொண்டு வந்தது?" என்று அந்த சப்-இன்ஸ்பெக்டர் அதட்டலான குரலில் கேட்டார்.

துரை நிதானமாக எழுந்து முன்வந்தார். "நான்தான் கொண்டு வந்தேன். விபத்து நடந்த இடம் 'சிக்ஸர்' ஜங்ஷன். எதிரே வந்த வாகனம் ஒன்-வேயில் விதிமீறி வந்திருக்கு. அந்த வண்டியோட டயர் மார்க்ஸ் ரோட்டுல தெளிவா இருக்கு. நான் விபத்து நடந்த நேரத்தையும், அங்கிருந்த சிசிடிவி கேமரா நம்பரையும் நோட் பண்ணிட்டேன். சட்டப்படி இது ஐபிசி 279 மற்றும் 337-ன் கீழ வரும். எஃப்.ஐ.ஆர் போடுறதுக்குத் தேவையான அத்தனை ஆவணங்களையும் நான் இப்போவே தயார் செஞ்சு வச்சிருக்கேன்" என்று மிகத் துல்லியமாகச் சட்ட நுணுக்கங்களுடன் பதில் அளித்தார்.

அவரது பதிலில் இருந்த ஆளுமையையும், சட்ட அறிவையும் கண்டு வியந்த அந்த அதிகாரி, "ரொம்ப விவரமா பேசுறீங்களே... நீங்க யார்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

துரை மென்மையாகப் புன்னகைத்துவிட்டு, "நான் துரை, பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருந்து ஓய்வு பெற்றவன்" என்றார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் அனைவரும் "ஓ அப்படியா சார் நீங்க தான் காவல்துறைக்கும் உடனடியா தொலைபேசி வாயிலாக தகவல் தந்தவர் இல்லையா?" என்று அவருக்கு வணக்கம் செலுத்தினர். தற்போதைய ஆய்வாளர் விரைந்து வந்து, "சார், நீங்க ரிட்டையர் ஆனாலும் உங்களோட அந்தத் துடிப்பும், சட்ட நுணுக்கமும் அப்படியே இருக்கு. எங்களைப் போன்ற தற்போதைய அதிகாரிகளுக்கு நீங்கதான் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் !" என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சாதனாவின் கண்கள் கலங்கின. தான் இவ்வளவு நாள் வெறுத்து ஒதுக்கிய அந்த 'காவல்துறைப் பயிற்சி' தான் இன்று தன் மருமகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்பதை உணர்ந்தாள்.

சாதனா மெல்ல துரையின் அருகில் சென்று, "என்னை மன்னிச்சிடுங்க அய்யா... போலீஸ்காரங்க மனசுல ஈரம் இருக்காதுன்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனா, அந்தப் பதவியும் பயிற்சியும் தான் உங்களை இவ்வளவு துணிச்சலா செயல்பட வச்சிருக்குன்னு இப்பதான் புரியுது. சீருடை இருந்தாலும் இல்லாட்டியும் எங்க தெருவோட காவல் நீங்க தான்!" என்று மனமாறக் கூறினாள்.

துரை அமைதியாகப் புன்னகைத்தார். "சீருடைங்கிறது ஒரு வேலைக்கான அடையாளம் சாதனா, ஆனா அதுக்குள்ள துடிக்கிற இதயம் எல்லா மனுஷங்களையும் போலத்தான்! எங்க கிட்ட மனதை அடைத்து வைக்கிற சிறை இல்லை " என மனதார சொல்லி மேலும் தேவையான உதவிகளை அங்கிருந்து செய்து முடித்தார். 


 அன்று முதல் சாதனாவின் வீட்டில் காவல்துறையின் மீதான மரியாதை மாறியது.


----


ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%