சூரிய பகவான், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மாசி மாதம். இந்த மாதத்திற்குரிய அதி தேவதை மகாவிஷ்ணுவாகும். தமிழ் வருடத்தில் நான்கு மாதப்பிறப்புகள் விஷ்ணுபதி புண்யகாலம் என்றழைக்கப்படுகிறது. அதில் மாசி மாதப்பிறப்பும் அடங்கும். விஷ்ணுபதி புண்யகாலமான மாதப் பிறப்பன்று மகாவிஷ்ணுவை பூஜித்தால் வாழ்வில் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். இம்மாதத்தில் ஸ்ரீமன் நாராயணனை தினமும் துளசிக் கொண்டு பூஜித்தால் இல்லத்தில் சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
இந்த மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாதமாகும். இந்த மாதத்தில் சிவசக்தி வழிபாடு, பெருமாள் வழிபாடு, புனித நீராடுதல் மற்றும் தான தர்மங்கள் செய்வது, சுமங்கலி பாக்கியம் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தது மாசி மகத்தன்று என்று புராணம் கூறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புபவர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது. அன்று விரதம் இருந்து விநாயகரை வணங்கினால், நம் அனைத்து சங்கடங்களும், பாவங்களும் விலகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனத்தை அடக்கி நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்நாளின் சிறப்பாகும்.
சிவராத்திரி அன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். மேலும் காசியில் வீடுபேறு அடைந்த பலன் கிடைக்கும். இந்த வருடம் பிப்ரவரி 15, மாசி 3ஆம் தேதியன்று சிவராத்திரி.
மாசிமாதப் புனர்பூச நட்சத்திரத்தன்று குலசேகர ஆழ்வார் அவதாரத் திருநாள். மாசி மாதம் பூச நட்சத்திரம் அன்று முருகப் பெருமான் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த நாளாகும் .
மாசி மாதப் பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் வரும் நாள் மாசி மகம் என்று அழைக்கப்படும் இந்நாள் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். அன்றுதான் சிவபெருமான் மன்மதனை எரித்தார். இது காம தகன நாள் என்று கொண்டாடப்படுகிறது.
மாசி மகத்தன்று புனித நீராடினால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறுவர். அனைத்து கோவில்களிலும் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாசி மாதத்தில்தான் பார்வதி தேவி காளிந்தி நதியில், தாமரைமலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம்.
பெரும்பாலான வைஷ்ணவ ஆலயங்களில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடக்கும் மாசி மகத் திருவிழா மகா மகம் என்று அழைக்கப்படும் வட மாநிலங்களில் இது கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது. அனைத்து நலன்களையும் அருளும் மாசி மகம் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் விரதம் இருந்து இறைவன் அருளைப் பெறுவோம்.
மாசி மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை இதில் வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி எனவும் தேய்பிறை ஏகாதசி விஜய ஏகாதசி எனவும் அழைக்கப்படும் இதில் தேய்பிறையில் வரும் விஜய ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவை மனதார தியானித்து விரதம் இருந்தால் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வ வளம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம் .
இம்மாதம் புதிய கலைகள் கற்கவும் மந்திர உபதேசம் பெறவும் சிறந்த மாதமாகும். எனவே தான் உபநயங்கள் அதாவது சிறு குழந்தைகளுக்கு பூணூல் போடுவதை இம்மாதத்தில் வைத்துக் கொள்வார்கள்.
மாசிச் சரடு பாசி படரும் என்பதற்கு ஏற்ப சுமங்கலி பெண்கள், ஒரு நல்ல நாளில் திருமாங்கல்ய சரடு மாற்றிக் கொள்வார்கள்.
மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் 'காரடையான் நோன்பு' அனுஷ்டிக்கப்படுகிறது இது 'சத்தியவான் சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படும் சாவித்திரி சத்தியவானை எமனிடமிருந்து மீட்பதற்காகக் காட்டில் கிடைத்தவற்றைக் கொண்டு கார அடை செய்து சத்யவானை உயிருடன் மீட்டுக் கொண்டு வந்தாள். கணவரின் தீர்க்க ஆயுளுக்காக பெண்கள் கார அடை செய்து மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் நோன்புச்சரடு கட்டிக் கொள்வார்கள். அப்போது அவர்கள்
"உருகாத வெண்ணையும் ஓர் அடையும் போல நானும் என் கணவனும் இணை பிரியாது இருக்க வேண்டும்!" என்று வேண்டிக் கொள்வார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாசி மாதத்தில் வரும் விரதங்களைக் கடைபிடித்து இறைவனின் பரிபூரண அருளுக்கு அனைவரும் பாத்திரமாவோம். நன்றி

எழுத்தாளர்
அலமேலு ரங்கராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூர்