சமையலில் நாம் பயன்படுத்தும் எண்ணெய், உப்பு, சர்க்கரை இம்மூன்றும் அளவு அதிகரிக்கும் போது சிகரெட், ஆல்கஹால் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா, சர்க்கரை நோயின் தலைநகரமாக உள்ளது. தற்போது, 80 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்; 5 ஆண்டுகளில், 100 மில்லியன் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெறும் சர்க்கரை பாதிப்பு என, ஒதுங்கிவிட முடியாது. மாரடைப்பு, வாதம், சிறுநீரக பாதிப்பு என பெரிய பாதிப்புகளை உருவாக்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை சரியாக வைத்துக்கொண்டால், பல்வேறு பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இதை உணவின் வாயிலாகவே சரிசெய்ய முடியும். சர்க்கரை பயன்பாடு 50 சதவீதம் கட்டாயம் குறைக்க வேண்டும். பிரதமர் கூறியது போல், உப்பு, எண்ணெய், சர்க்கரை மூன்றையும் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
'ஆயில் குறைப்பது ஆயுளுக்கு நல்லது'
ஒவ்வொரு வீட்டு சமையல் அறையில் இருந்தும், மாற்றம் துவங்க வேண்டும். மாதத்திற்கு இவ்வளவு எண்ணெய் என அளந்து குறைத்து பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அளவை கட்டுப்படுத்த தவறினால், கொழுப்பு அதிகரித்து இதயம் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உப்பு சராசரியாக 4 முதல் 6 கிராம் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், சாதாரணமாக 12 கிராம் வரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். எண்ணெய், உப்பு, சர்க்கரை மூன்றையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் ஆலிவ் எண்ணெய் சிறந்தது. ஆனால், அனைவராலும் விலை காரணமாக வாங்க முடியாது. ஆலிவ், நல்லெண்ணெய் இதயத்திற்கு சிறந்தது. ஒரு எண்ணெயை சமையலுக்கு தொடர்ந்து பயன்படுத்தாமல், ஆலிவ், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என, மாற்றி மாற்றி, பயன்படுத்த வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதால், கெட்ட கொழுப்புகள் சேர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உணவு முறையை மாற்றினால், நம் சந்ததிகள் நோயின்றி வாழமுடியும்.
'சர்க்கரை அளவில் தேவை அக்கறை
சர்க்கரையை மொத்தமாக எடுக்காமல் இருப்பதே சிறந்தது. ஒரு காலத்தில் உணவு பற்றாக்குறை இருக்கும்போது எண்ணெய் பயன்பாட்டை நாம் ஊக்குவித்தோம். தற்போது உணவு அபரிமிதமாக இருப்பதால், எண்ணெய் பயன்பாடு அதிகம் தேவையில்லை.
எண்ணெயை குறைத்தாலே, உடல் பருமன் உட்பட பல சிக்கல்களை குறைத்துவிடலாம். பிராசஸ்டு உணவுகளில் உப்பு, எண்ணெய் அதிகம் இருப்பதால், மொத்தமாக தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஆரோக்கியமாக சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பொருளை வாங்கும் போது சர்க்கரை, கொழுப்பு, புரதம் என எவ்வளவு இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை பார்த்து உடலுக்கு ஆரோக்கியமானதை மட்டும் வாங்க வேண்டும்.
இந்த வாழ்வியல் மாற்றங்கள், குழந்தைகளுக்கு மட்டும் தான். பெரியவர்களுக்கு வரவேண்டிய சிக்கல்கள் முன்பே வந்துவிட்டன. பிள்ளைகள் கேட்பது அனைத்தும் வாங்கி தருவது, அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். உணவு கட்டுப்பாடு மட்டுமின்றி, உடற்பயிற்சியையும் கட்டாயம் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.