ராஜனின் கார் வேகம், அவன் வாழ்க்கையின் வேகத்தைப் போலவே கட்டுப்பாடின்றி ஓடியது.
ஹார்ன், பிரேக், மனிதர்கள், எதுவும் அவனுக்குக் கணக்கில் இல்லை.
சாலையே அவனுக்குச் சொந்தம் போல ஓட்டினான்.
ஒரு கணம்,
"டமார்" என்ற சத்தத்தை தொடர்ந்து "அம்மா…!”என்ற சத்தம் காற்றைத் துளைத்தது.
பிரேக் அடிக்கும் முன், கார் சக்கரம் ஒரு சிறு காலின் மீது ஏறி இறங்கியது.
சாலை மீண்டும் அமைதியானது. ராஜனுக்குள் மட்டும் புயல்.
மருத்துவமனை வாசலில் தலை குனிந்தபடி நின்றான்.
“காப்பாத்த முடியலை சார்…
கால் எடுக்க வேண்டியதாயிடுச்சு…”
டாக்டர் சொன்ன வார்த்தைகள் ராஜன் நெஞ்சில் சக்கரமாய் உருண்டன.
ராஜனிடம் பணம் இருந்தது. அதிகாரமும் இருந்தது. ஆனால்
திரும்பக் கொடுக்க முடியாததல்லவா
அந்த சிறுவனின் கால்?
அன்றே ராஜன் காரை விற்றான். அந்தப் பணத்தில் சிறுவனுக்குச் செயற்கைக் கால் செய்து தந்தான்.
முதல் முறையாக அந்தக் கால் தரையில் பதியும் போது சிறுவனிடம் பழைய சிரிப்பு வந்தது.
அந்தச் சிரிப்பு
ராஜனுக்கு அழுகையைத் தந்தது.
சிறுவனின் அம்மா கேட்டாள்,
“காரை வித்துட்டீங்களே...இனிமே எப்படிக் காரு ஓட்டுவீங்க சார்?”
ராஜன் இட, வலமாய்த் தலையை ஆட்டினான். "இல்லை... என் தவறுக்கு தண்டனையா இனி என் வாழ்க்கையின் கடைசி வரை
கார் ஓட்டப் போவதில்லை.. ஒரு கார்ச் சக்கரம் ஒரு வாழ்க்கையையே நசுக்கும் வலிமை உடையதுன்னு
நான் தெரிஞ்சுக்கிட்டேன்… ”
அன்று முதல் ராஜன் நடந்தான்.
ஒவ்வொரு அடியும் ஒரு மன்னிப்பாக. ஒவ்வொரு வலியும் ஒரு நினைவாக.
ஆம், இப்போது ராஜன் மனிதனாய்ப் பயணித்துக் கொண்டிருக்கின்றான்.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?