கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; சீரமைப்பு பணி துவங்கியது
Jul 31 2025
16

மூணாறு;
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவரவியல் பூங்கா அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி துவங்கியது. ஒருவரிசையில் வாகனங்கள் செல்லுமளவு சரிசெய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஜூலை 26 இரவில் ஏற்பட்ட மண் சரிவில் மினி லாரி சிக்கி டிரைவர் கணேசன் 58, இறந்தார். அதே பகுதியில் நேற்று முன்தினம் காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நேற்று காலை துவங்கியது. இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மண் அகற்றப்பட்டு வருகிறது. மலை போல் குவிந்துள்ள மண், கற்கள் அகற்றப்படுகிறது.
ஒருவரிசையில் வாகனங்கள் செல்லுமளவு சரிசெய்யப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாலும், மழை பெய்யும் பட்சத்தில் சீரமைப்பு பணி பாதிக்கப்படும் என்பதாலும் குறிப்பிட்ட கால அளவில் பணிகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும்.
ஆய்வு: சீரமைப்பு பணிகள் பூர்த்தியானதும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் புவியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் 2018 ஜூலை 15, 16,ல் பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு கல்லுாரி கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
அங்கு ஆய்வு நடத்திய புவியியல் வல்லுனர்கள் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கை தாக்கல் செய்ததால் கல்லுாரி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வு நடத்தும் புவியியல் வல்லுனர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கை தாக்கல் செய்ய நேரிட்டால், அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புஏற்பட்டுள்ளது. பூங்கா மூடல்: நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட நிலச்சரிவில் மண், கற்கள் அரசு தாவரவியல் பூங்காவின் ஒரு பகுதியில் பெரும் அளவில் குவிந்தன. தவிர மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?