குழந்தைதொழிலாளர் இல்லாத மாவட்டம் குமரி' ஆணையத் தலைவர் விஜயா பெருமிதம்
'
நாகர்கோவில், நவ.20-
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி திகழ்கிறது என்று மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் தொடர்புடைய அலுவலர்கான கூராய்வு கூட்டம் கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடந்தது. மாவட்ட எஸ்பி.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நேய மாவட்டமாக உருவாக்குவதில் மாவட்ட ஆட்சியரின் பங்கு அதிகளவில் உள்ளது. அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் குழற்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிப்பட்டது. குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 132 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகள் நீதிமன்ற வழக்கின் காரணமாக ஆணையத்தின் பணிகளில் சற்று தேய்வு ஏற்பட்டது. தற்போது கடந்த 4 மாதங்களாக தடை நீக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாங்கள் இதுவரை சென்ற வந்த 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதற்காக ஊக்கம் அளித்து வரும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயா கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் செல்வேந்திரன், ஜெயசுதா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.