குரூப்–4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

குரூப்–4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 22–


குரூப்–4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ள தால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 12ம் தேதி தேர்வு நடத்தியது. தோ்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 போ் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தேர்வுக்கு முன்பாக மதுரையில் குரூப் 4 வினாத்தாள் ஒரு ஆம்னி பேருந்தில் சீலிடப்படாமல் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.


இதனால் குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.7.2025 அன்று நடைபெற்ற குரூப்–4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு ஏ4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில் தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.


குரூப்–4 பதவிகள், குறிப்பாக விஏஓ பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. சாதி, மத, பேதமின்றி, ஏழை, எளிய பின்னணி கொண்ட மக்கள், அரசு அதிகாரிகள் ஆக வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பதவி.


பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்–4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்–4 தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்–4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


குரூப்–4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.


இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "குரூப் 4 விடைத்தாள்கள் டிரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள்மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர்கூறுகையில், "குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதியே சென்னை கொண்டு வரப்பட்டது. டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது " என்று தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%