சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா பதவி ஏற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம்
சென்னை. ஜூலை.22-
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் 54-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் சென்னை ஐகோர்ட்டின் 36-வது தலைமை நீதிபதியாகவும் இவர் பதவி ஏற்றுள்ளார்.
இவரது பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை 4 மணியளவில் நடந்தது. எம்.எம்.ஸ்ரீவத்சவாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொதுவாக தலைமை நீதிபதி பதவி ஏற்பு மேடையில் முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரும் அமர்ந்து இருப்பார்கள். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
தலைமை செயலாளர் முருகானந்தம் மேடையில் இருந்தார். பதவி ஏற்றுக்கொண்ட புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு தலைமை நீதிபதி, கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எதிர்கட்சித் தலைவர் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள எம்.எம்.ஸ்ரீவத்சவா, கடந்த 1964-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தார். 2009-ம் ஆண்டு சத்தீஷ்கார் ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.