கர்நாடக தொழிலதிபரை கடத்தி கொன்று தமிழக எல்லையில் உடல் வீச்சு: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்
ஓசூர்: கர்நாடகா மாநில தொழிலதிபரை கடத்திக் கொலை செய்து, அவரது உடலை தமிழக எல்லையில் வீசிச் சென்றவரை அம்மாநில போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் அருகேயுள்ள கித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரை கடந்த 4-ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்தனர். இது தொடர்பாக ஹெப்ப கோடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலப்பா ரெட்டி என்பவரை ஜிகினி உள்வட்ட சாலையில் சிலர் காரில் கடத்திச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். விசாரணையில், பொம்மசந்திராவைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி என்பவர் மாதேஷ் மற்றும் பாலப்பாரெட்டி ஆகியோரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் கர்நாடக போலீஸார் ரவி பிரசாத் ரெட்டியை பிடிக்கச் சென்றனர். அப்போது, ரவி பிரசாத் ரெட்டி போலீஸாரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்றார். இதில் தலைமைக் காவலர் அசோக் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரவி பிரசாத் ரெட்டியை காவல் ஆய்வாளர் சோமசேகர் துப்பாக்கியால் இரு கால்களிலும் சுட்டு பிடித்தார்.
காயமடைந்த ரவி பிரசாத் ரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதை ஈடு செய்வதற்காக தொழிலதிபர்களைக் கடத்திப் பணம் பறிக்க முயன்றதும், பணம் கொடுக்காததால் கொலை செய்ததும், கொலையான பாலப்பா ரெட்டியின் உடலைத் தமிழக எல்லையான ஓசூர் சானமாவு வனப் பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, சானமாவு வனப் பகுதிக்கு நேற்று சென்ற போலீஸார், பாலப்பா ரெட்டியின் உடலை மீட்டுச் சென்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?