கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்
Oct 05 2025
54
ஒட்டாவா:
கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்தொடர்ச்சியாக, திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவைப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, அந்த திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை குறிவைத்து செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்மநபர்கள் திரையரங்குகளின் மீது தீ வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து இந்திய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், காவல் துறை தரப்பு இதுகுறித்து உறுதிப்படுத்தவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?