ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை: கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலம் போனார்
ஐ.பி.எல். ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு விலை போனார். உள்ளூர் வீரர்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீரை தலா ரூ.14.20 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு, பரஸ்பர பரிமாற்றம் நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் சேர்ந்து 173 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம். அந்த வகையில் 77 இடங்களை நிரப்ப வேண்டி இருந்தது.
இதற்கிடையே கழற்றிவிடப்பட்ட மற்றும் புதிய வீரர்கள் என 1,390 பேர் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர். இதில் இருந்து 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என 350 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அணிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடைசி நேரத்தில் 19 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். ஆக மொத்தம் 369 பேர் இறுதி ஏலப்பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.
முதல் வீரராக தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஏலம் போனார். அவரை அவரது தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.
ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை எடுக்க போட்டோ போட்டி நிலவியது. அவரது ஆரம்ப விலையான ரூ.2 கோடியில் மும்பை கேட்டது. அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ெதாகையை உயர்த்திக் கொண்டே வந்தன. ரூ.13.8 கோடியை தொட்ட போது கோதாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் குதித்தது. ராஜஸ்தான் ஒதுங்கிக் கொண்டது. அதன் பிறகு சென்னை, கொல்கத்தா இடையே நேரடி போட்டி நிலவியது.
ரூ.18 கோடி, ரூ.20 கோடி, ரூ.25 கோடி என விலை தாறுமாறாக எகிறியது. இறுதியில் ரூ.25.20 கோடி என்று கொல்கத்தா சொன்ன போது, அத்துடன் சென்னை அணியினர் யோசித்து விட்டு பின்வாங்கினர். இதனால் அந்த தொகைக்கு கொல்கத்தா அணி கிரீனை தட்டிச் சென்றது.
ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை கிரீன் பெற்றார். இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.50 கோடிக்கு இதே கொல்கத்தா அணி எடுத்ததே அதிக தொகையாக இருந்தது. கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலம் போனாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும். மினி ஏலத்திற்கான கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிப்படி, வெளிநாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு அதிகபட்சமாக தக்கவைக்கப்பட்ட தொகைக்கு (ரூ.18 கோடி) மேல் வழங்கப்படாது. எனவே அவருக்குரிய ரூ.18 கோடி போக மீதமுள்ள ரூ.7.20 கோடி கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நலநிதிக்கு வழங்கப்படும்.
26 வயதான கேமரூன் கிரீன் 2024-–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக 13 ஆட்டங்களில் ஆடி 255 ரன்களும், 10 விக்கெட்டும் எடுத்தார். காயத்தால் கடந்த சீசனில் விளையாடவில்லை.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி சொந்தமாக்கியது.
லியாம் லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு ஐதராபாத் அணி பெற்றது. ஜோஷ் இங்லிசை ரூ.8.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தட்டிதூக்கியது.
முஸ்தாபிஜூர் ரகுமான் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணியில் இணைகிறார். சென்னை அணி பிறகு ரூ.2 கோடிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை வசப்படுத்தியது.
ரவி பிஷ்னோயை ரூ.7.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்சும், வெங்கடேஷ் அய்யரை ரூ.7 கோடிக்கு நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் வாங்கின.