ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது” - EU பிரதிநிதி பேச்சு

ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது” - EU பிரதிநிதி பேச்சு


 

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பாவின் பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருவதாகவும், புதுடெல்லியில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சி மாநாடு இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் நடைபெற உள்ள குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவும், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 16வது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்கவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டத் தலைவர்கள் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அந்த அமைப்பின் உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.


அப்போது அவர் கூறியதாவது: ஐரோப்பாவின் பொருளாதார மீள்திறனுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், மக்களுக்கு இடையேயான உறவு என பல துறைகளை உள்ளடக்கிய ஒரு வலிமையான புதிய செயல்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது. புதுடெல்லியில் நடைபெற உள்ள சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


போர்கள், நிர்பந்தங்கள், பொருளாதார பிளவுகள் ஆகியவற்றால் சர்வதேச ஒழுங்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த நேரத்தில், இரண்டு பெரிய ஜனநாயக சக்திகள் தயங்கிக் கொண்டிருக்க முடியாது. சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு இரு தரப்பினருக்கும் உள்ளது.


உச்சிமாநாட்டின் மையாக, புதிய மற்றும் விரிவான ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையேயான கூட்டு மூலோபாய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வது இருக்கும். இது 2030-ம் ஆண்டுக்கான கூட்டாண்மையின் பாதையை வகுக்கும். தலைவர்கள் திட்டம் சார்ந்த வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல், இரு தரப்பு உறவை வார்த்தைகளில் இருந்து செயல்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் உறுதியான முடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள்.


மூன்று முக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் -இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினரும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இரண்டாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையே பாதுகாப்பு, தற்காப்பு கூட்டாண்மைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஒரு விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள், தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் இயக்கம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%