ஆசிரியர் : தேவிபாலா
வெளியீடு: புஸ்தகா
விலை : ₹210
தொடர்புக்கு: 7418555884
எழுத்தாளர் தேவிபாலா தன் சின்னத்திரை/ எழுத்துலக அனுபவங்களை (46 ஆண்டுகள்) முகநூலில் பதிவிட்ட போதே, இது தொகுப்பாக வரவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.
கே.பாலசந்தர், பாண்ட்ஸ் பாலா,ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஏ.சி.திருலோகசந்தர் "விவேக்சித்ரா" சுந்தரம், ரேவதி, குஷ்பு, சுந்தர் கே.விஜயன் குமுதம் பா.வரதராஜன், ப்ரியா கல்யாண ராமன் என உறுதுணையாக இருந்த பலரைப்பற்றி , இந்த 30 அத்தியாயங்களில் தந்துள்ளார்.
"மடிசார் மாமி" கதையை ஆர்.சி. சக்தி இயக்கத்தில் முதலில் ஸ்ரீவித்யாவை வைத்து திரைப்படமாக எடுக்க நினைத்துப் பின்னர், தயாரிப்பாளர் "விவேக் சித்ரா" சுந்தரம் சார் மூலம் GEC யில் (அந்நாளைய ஸ்டார் விஜய் டிவி) தொடராக ஸ்ரீவித்யாவிற்கு பதிலாக கே.ஆர்.விஜயா நடித்தது(அந்நாளில் தொடரைப் பார்த்த நினைவு என்னுள்).
இயக்குநர் சுந்தர் கே.விஜயன் உடன் சின்னத்திரையில் 3000 எபிசோடுகள் செய்தது, அதிகம் பணிபுரிந்ததும் அவரோடுதானாம்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனின் "கோபுரம்" தொடருக்கு முதல் 30 எபிசோடுகளுக்கான கதையுடன் தயாரான நிலையில், மகளின் சுவாசக் கோளாறு பிரச்சினை காரணமாக இவர் பணத்தை திருப்பித் தர முற்பட்டபோது, பணத்தை வாங்காது தொடரிலிருந்து விலக அனுமதிக்க, பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் அதற்கு எழுதியது,
விகடன் எழுத்தாளராக அறியப்பட்ட தன்னை, குமுதம் ரா.கி.ரங்கராஜனிடம் அழைத்துச் சென்ற, புன்னகையில் ஆண்" மோனாலிசா" ஆன பிரகாஷ் (எ) ப்ரியா கல்யாண ராமன் உடன் தேவிபாலாவுக்கு 25 ஆண்டுகால நட்பை குறிப்பிட்டது...
அதில் எழுதிய " மாவிலைத் தோரணம்" தொடர் ஏவிஎம் நிறுவனத்தில்" நிம்மதி உங்கள் சாய்ஸ்" ஆனது,
நடிகை ரேவதியின்" நிறங்கள்" இவரின் முதல் மெகாத் தொடர் ஆனது
பாண்ட்ஸ் பாலாவின் தொடரான "பல்லாங்குழி " யில் நடித்த நடிகை ஒரே நேரத்தில், பாலசந்தரின் "பிரேமி" தொடருக்கும் தேதி கொடுத்திருக்க, இயக்குநரிடம் தேவிபாலா எடுத்துச் சொன்னதும், தன் படப்பிடிப்பை அவர் பெருந்தன்மையோடு ரத்து செய்தது, என அனைத்தையும் நன்றி மறவாது குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரையில் உச்சத்தையும், அதல பாதாளத்தையும் பார்த்த பாலா சாரின் திடீர் மறைவுக்குப் பின் 3 மாதங்கள் கழித்து மாமி, அவர் தேவிபாலாவுக்கு தர வேண்டிய தொகை குறித்து சொல்ல , இவர் வேண்டாமென மறுத்தது கண்கள் பனிக்கச் செய்தது.
இதே போல், தயாரிப்பாளர் வலம்புரி சோமநாதன் நடிகர் "சுருளி ராஜன்" மறைவிற்குப் பின் அவருக்கு தரவேண்டிய தொகையை கொண்டு வந்து தந்ததை, அவர் மனைவி ஒரு தீபாவளி மலரில் குறிப்பிட்டிருந்ததும் என் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி