"தனியொரு மனிதனுக் குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. ஆனால் சோறு இல்லாமல் ஒரு வாரத்தைக்கூட கழித்துவிடலாம். காபி இல்லாமல் ஒரு நாளைக் கூட கழிக்க முடியாதென்பதே இங்கு நம்மவர் பலரின் நிலை. காபியின் ஆதிக்கம் நாவின் சுவை அரும்புகளில் தொடங்கி மூளை நரம்புகள் வரை கொடிகட்டிப் பறக்கிறது. அத்தகைய காபியின் கதையை இங்கு சற்று சுவைப்போம்.
அது பொது யுகம் 800ன் காலகட்டம். ஆப்ரிக்க கண்டம், அபிசீனியாவின் (இன்றைய எத்தியோப்பியா) கபா (Kaffa) என்ற பகுதியில், கல்டி (Kaldi) என்ற ஆடு மேய்க்கும் ஒருவன் இருந்தான். அவன் தனது ஆடுகளில் சில வழக்கத்தை விட வெகு உற்சாகமாகத் துள்ளிக் குதித்து குதூகலமாகத் திரிவதைக் கவனித்தான். அதற்கு அவை ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் விதைகளை மேய்ந்ததுதான் அந்தத் துள்ளலுக்கு காரணம் என்று கண்டான். அவனது எஜமானனான அரபு ஷேக் அந்த விதைகளைத் தனது நாடான ஏமனுக்கு கொண்டு சென்றார். அவர் தயாரித்த டிகாக்க்ஷன் சுவை மிகுந்ததாய் இருந்தது. ஆனால் அதை அங்குள்ள மத குருமார்கள் அது சாத்தானின் பானம் (Devil's drink) என்று சொல்லிப் புறக்கணித்தார்கள்.
இவ்வாறு காபியின் பிறந்த வீடு எத்தியோப்பியா. அதன் புகுந்த வீடு இந்தியா. எப்படி?
ஹஸ்ரத் ஷா மெஹதாப் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு சுபி ஞானி என்றும், அல்ல அவர் ஒரு விவசாயி என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பாபா - பதா - உத்தீன் என்றும், பாபா பூதான் என்றும் அழைக்கப்பட்டார். அவர் கர்நாடகாவின் (இன்றைய சிக்மகளூரு மாவட்டத்தின்) காடூர் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பொ. யு. 1670ல் தனது ஹஜ் யாத்திரைக்காக மெக்கா செல்லும் வழியில் ஏமன் நாட்டின் மோச்சா துறைமுகத்தில் கப்பலின் கேப்டன் ஒருவர் அவருக்கு நண்பரானார். கடல் பயணத்தின் ஒவ்வாமையை (sea- sickness) சமாளிக்கவும், சுறுசுறுப்புக்காகவும் காபி கொட்டையின் டிகாக்க்ஷனை கேப்டன் இவருக்குக் கொடுத்தார். அதை அருந்தியதும் அது நல்ல பலன் தருவதை ஹஸ்ரத் ஷா உணர்ந்தார். எனவே தனது அடர்ந்து நீண்ட தாடியில் ஏழு காபி விதைகளை மறைத்து, சுங்க அதிகாரிகளுக்கு தெரியாமல் தனது ஊருக்கு கடத்திக் கொண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது.
அவர் கொண்டு வந்த ஏழு விதைகளையும் தனது வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் விதைத்தார். கவனமாகப் பராமரித்தார். மூன்று மாதங்களுக்குப் பின் ஏழு விதைகளில் மூன்று மட்டும் முளை விட்டன. அவை செடியாக உயர்ந்து, கிளை பரப்பி, காய்த்து, கனிகளுடன் செழித்து வளர்ந்தன. இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் காபி பானத்தைத் தயாரித்து வெற்றி கண்டவர் அவரே. பின்னர் சிக்மகளூர் மாவட்டத்தில் இன்று பாபா பூதான்கிரி ஹில்ஸ் என்று அழைக்கப்படும் சந்த்ர துரோணா மலைச்சரிவில் பரவலாக காபி பயிர் தோட்டமாகப் பயிரிடப்பட்டது.
அக்காலத்தில் மிக அரிய பொருளாக இருந்த காபி கொட்டைகள் உப்புக்கும், தங்கத்துக்கும் ஈடாகப் பண்டமாற்று முறையில், அரேபியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அதன்பின் காபி ஐரோப்பாவிற்கு பரவியது. உலகின் முதல் காபி ஹவுஸ் பிரிட்டனின் கார்ன்ஹில் பகுதியிலுள்ள செயிண்ட். மைக்கல்ஸ் ஆலே என்ற சிறிய வீதியில் திறக்கப்பட்டது. அதை நிறுவி பெரும் அளவில் அதை விளம்பரப் படுத்தியவர் பாஸ்க்வா ரோஸி (Pasqua Rosee) என்ற கிரேக்கர். அதன்பின் காபியின் பயன்பாடு சூடாக உலகெங்கும் பரவியது.
காபிக் கொட்டையில் முக்கியமாக இரண்டு வகை உண்டு. ஒன்று காபியா அராபிக்கா (coffea arabica), 60 முதல் 80 சதம் வரை காபிக்கு இந்த வகைதான் பயன்படுத்தப் படுகிறது. அடுத்தது காபியா கேனிபோரா (coffea canephora). இது சுமார் 20 முதல் 40 சதம் வரை காபி உற்பத்திக்கு பயன்படுகிறது.
இதுதான் காபியின் வரலாறு.
P. கணபதி
பாளையங்கோட்டை