உஷா சென்னை வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கணவன் கணேஷின் அருகிலேயே இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதால் சென்னையிலேயே வீடு பார்த்தாயிற்று. வெளி மாநில ஆட்கள் நிறைய பேர் வேலை செய்யும் கம்பெனிக்கு கணேஷ் தான் சூப்பர்வைசர்.
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உஷாவுக்கு திடீரென்று பட்டணத்துக்கு வந்ததும் எதுவும் புரியவில்லை. பழகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவளே சமாதானமானாள்.
"வீடெல்லாம் பிடிச்சிருக்கா ? இல்லன்னா சொல்லு . வேற வீடு பார்த்திடலாம்" என்று கேட்டான் கணேஷ்.
"அதெல்லாம் வேண்டாங்க. வீடு நல்லா வசதியா தான் இருக்கு. பக்கத்துல வீடுங்க எதுவும் இல்லாததால பேச்சுத் துணைக்குத்தான் யாரும் இல்லை" என்றாள் உஷா.
மதியம் . டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த உஷாவுக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது .யாராக இருக்கும்? என்று நினைத்தவாறே கதவை லேசாகத் திறந்து "யாருங்க நீங்க என்ன வேணும் ?" என்று கேட்டாள்.
"மேடம்! தொட்டியை கிளீன் பண்ணனும்னு ஆபீஸ்ல இருந்து சார் அனுப்பினார்." என்று அவன் சொன்னதும் கதவை நன்றாகத் திறந்தாள் உஷா.
ஆபீஸ். உஷாவிடம் இருந்து போன். "ஹலோ ' என்றான் கணேஷ் "என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுப் பக்கம் வந்துட்டு போங்க" என்ற உஷாவின் பதட்டமான குரலைக் கேட்டதும் உடனே காரில் கிளம்பினான் கணேஷ்
கார் சத்தம் கேட்டதும்
.வெளியே ஓடிவந்த உஷா "என்னங்க! நீங்க அனுப்பினதா சொல்லி யாரோ ஒரு ஆள் வீட்டுக்கு வந்தான். அவனோட நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சதால அவனை நாலு தட்டுத் தட்டி கட்டிப் போட்டு வைச்சிருக்கேன் .சீக்கிரம் வாங்க " என்று சொல்லியதும் அதிர்ந்தான் கணேஷ்.
"இவனை நான் பார்த்துக்கிறேன்.
ஆமா உனக்கு இவன் மேல் எப்படி சந்தேகம் வந்துச்சு? "என்று கேட்டான் கணேஷ்.
"அவன் பேசும்போது லேசா வேற பாஷை மாதிரி பேசினான் . பேச்சிலேயே அவன் திருடத் தான் வந்திருக்கான்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டேன் .
எத்தனை சீரியல்லயும் சினிமாவிலும் இந்த மாதிரி பார்த்திருப்போம் . கிராமத்து பொண்ணுன்னா சும்மாவா?" என்று உஷா சொல்லச் சொல்ல கிறுகிறுத்துப் போனான் கணேஷ்.
புதிய இடத்துக்கு வந்திருக்கும் மனைவி உஷாராக இருக்கிறாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள 'ஆபீஸில் இருந்து நான் தான் ஒரு ஆளை இங்கே அனுப்பினேன்' என்பதை எப்படி அவளிடம் சொல்லுவது என்று தடுமாறி நின்றான் கணேஷ்

மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903