உணவு 'பேக்கிங் பிளாஸ்டிக்'கில் வேதி பொருட்கள்; எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
புதுடில்லி: உணவுப் பொருட்களை, 'பேக்கிங்' செய்ய பயன்படுத்தப்படும், 'பிளாஸ்டிக் கவர்'களில் குறிப்பிட்ட அளவுக்கு வேதி பொருட்கள் இருக்கலாம் எனும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதியை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ரசாயனங்கள்
ஆன்டிமோனி, டி.இ.ஹெச்.பி., எனப்படும், 'டை - எதில்ஹெக்சில் தாலேட்' என்ற ரசாயனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் பிளாஸ்டிக் கவர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
பிளாஸ்டிக் பொருட்களின் நெகிழ்வு தன்மைக்காக இந்த ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. ஒரு வேளை உற்பத்தி குறைபாடு காரணமாக பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள அந்த வேதிப் பொருட்கள் வெளியே கசிந்து, உணவுப் பொருட்களிலோ அல்லது குடிநீரிலோ கலந்தால் புற்றுநோய் மற்றும் ஆண்மை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட லாம் என கூறப்படுகிறது.
எனினும், குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே அந்த வேதி பொருட்கள் கலப்புக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த அனுமதி வரம்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
தரநிலை
அதில், 'உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ரசாயன பயன்பாடு வரம்பு விதிகள் திருத்தப்பட வேண்டும். பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் டி.இ.ஹெச்.பி., கலப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளைப் பயன் படுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நம் நாட்டின் தற்போதைய கள நிலவரத்தை மனுதாரர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனுதாரரை முதலில் நாடு முழுதும் பயணிக்க சொல்லுங்கள். இங்கே குடிப்பதற்கு கூட தண்ணீர் கி டைக்காமல் பொதுமக்கள் பலர் தவிக்கின்றனர்.
மஹாத்மா காந்தி இந்தியாவுக்கு வந்தபோது ஏழைகள் வசிக்கும் பகுதிகளை சென்று பார்த்தார். அவரை போல் நாடு முழுதும் சுற்றினால் தான் உண்மை என்னவென்பது தெரியும். இது, அளவுக்கு அதிகமாக பயந்ததால் ஏற்பட்ட விளைவு. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?