இன்ஸ்டாகிராமில் காதலன் போல பழகி 60 பவுன் நகைகளை சுருட்டிய தோழி: அடுத்து நடந்த சம்பவம்
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு மனைவியும், 17 வயதுடைய ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகி வருகிறார். இந்தநிலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மகளை அழைத்து விசாரித்தார். அப்போது மகள் 'நான் பிளஸ்-2 படிக்கும்போது எனக்கும், சக பள்ளி தோழிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் எனக்கு அந்த வாலிபரின் முகம் தெரியாது. அத்துடன் அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கவும், தாயாரின் மருத்துவ செலவுக்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நான் பணம் இல்லை என்று கூறியபோது, எனது நகைகளை உனது தோழியிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டு கொண்டார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எனது தோழி மூலம் அவருக்கு கொடுத்து அனுப்பினேன்' என்றார். இதையடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி தோழியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தார். இந்த நிலையில் தோழியின் தந்தை, தனது மகளின் பீரோவில் 8 வளையல், 2 தங்க சங்கிலி என 15 பவுன் நகைகள் இருந்ததாக போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நகைகள் மாணவியின் மாயமான நகைகள் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தோழியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தோழிதான், திட்டமிட்டு மாணவியை ஏமாற்றியது அம்பலமானது. இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி காதலன் போல் பேசி மாணவியிடம் நாடகமாடியதும் அவரே தான். பின்னர் காதலனுக்கு கொடுக்க வேண்டும் என கூறி நகைகளை அபகரித்ததும் தோழிதான். மேலும் இதற்கு அவருடைய தாயார் வகுத்த திட்டமே, மூலக் காரணம் என்ற மற்றொரு பகீர் தகவலும் வெளியானது. அதாவது தோழியின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாயார் சுய உதவி குழுக்களிலும், வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியடைந்தார்.
இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கடனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தனர். அப்போது, தாயாருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது தனது மகளின் தோழியான மாணவி, நல்ல வசதியுடன் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து நகைகளை அபகரிக்க திட்டமிட்டார். தாயாரிடம் ஆலோசனை படி தோழி ஒரு ஆண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாணவியிடம் காதலன் போல் இனிக்க, இனிக்க பேசி பழகி வந்துள்ளார். இதனை சாதகமாக வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கவும், தாயின் மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது என கூறி தோழி நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார்.
அந்த நகைகளை அடகு வைத்து தாயின் கடனை அடைத்து வந்ததோடு தங்களது குடும்ப தேவைகளையும் நிறைவேற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.இதற்கிடையே விசாரணை முடிந்து வீடு திரும்பிய தோழியும், தாயும் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.