இந்திய வருகையின் மூலம் மெஸ்ஸிக்கு கிடைத்த வருமானம்: விசாரணையில் வெளியான தகவல்
புதுடில்லி: கால்பந்து ஜாம்பவான் லியோனெல் மெஸ்ஸிக்கு, இந்திய வருகையின் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அர்ஜென்டினாவின் தேசிய கால்பந்து அணி கேப்டனும், ஜாம்பவானுமான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நம் நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்த மெஸ்ஸி, மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். அவருடன் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போட்டி போட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
போர்க்களம்
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியின் முதல் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 13ல் நடந்தது.இதை சதத்ரு தத்தா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நுழைவுக்கட்டணமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டது. சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸியை, அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சூழ்ந்ததால் , ரசிகர்களால் அவரை பார்க்க முடியவில்லை. 10 நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு அவர் வெளியேறினார். மெஸ்ஸியை பார்க்க முடியாததால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். அந்த இடமே போர்க்களமானது.பல மணி நேரம் போராடி போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டதுடன் குளறுபடி குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைத்தார். வழக்குப்பதிவு செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை அன்றைய தினமே கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
நிர்பந்தம்
விசாரணையின் போது சதத்ரு தத்தா கூறியதாவது: கட்டுப்பாட்டுடன் நடக்கும்படி தொடர்ந்து அறிவித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மெஸ்ஸியை சூழ்ந்து கொண்ட விதம் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதுடன் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.மைதானத்தில் 150 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், முக்கிய நபர் ஒருவர் வந்த போது கூட்டம் மூன்று மடங்காகியதுடன் அவர் தன்னை நிர்பந்தம் செய்தார். அந்த செல்வாக்கு மிக்க நபர் வந்த பிறகு மெஸ்ஸியின் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.
வரி
மெஸ்ஸி இந்திய பயணத்துக்கு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் 11 கோடி ரூபாய் அரசிடம் வரியாக செலுத்தப்பட்டது. இதன் மூலம் அவரது வருகைக்கு மட்டும் 100 கோடி ரூபாய் ஆனது. இந்த பணத்தில் 30 சதவீதம் விளம்பரதாரர்கள் மூலமும், மேலும் 30 சதவீதம் டிக்கெட் கட்டணம் மூலமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை
இதனிடையே, கடந்த 19 ம் தேதி சத்துரு தத்தாவின் வீட்டில் சோதனை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பல முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தனர். அதில் அவரது வங்கிக்கணக்கில் 20 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணம், மெஸ்ஸியின் வருகைக்காக கோல்கட்டா மற்றும் ஐதராபாத் மைதானங்களில் டிக்கெட் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை என சத்துரு தத்தா தெரிவித்ததாக விசாரணை குழுவினர் கூறியுள்ளனர். இதனை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.